சர்வதேச மசகு எண்ணெய் விலைகளின் அண்மைய உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
பல எரிபொருள் விநியோக நிறுவனங்கள் எதிர்நோக்கும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டு சந்தையில் தற்போது ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, தற்போதைய நிலைமையின் கீழ் தமது வணிக நடவடிக்கைகளை தொடர்வது சவாலாக மாறியுள்ளதாக பல தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகவும், அவர்களுடன் விரைவில் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதிகரித்த செலவுகளை சமாளிப்பதற்காக பல்வேறு தீர்வுகள் பரிசீலனையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்று மானியம் வழங்குதல் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட விலை நிர்ணய முறைமையை அறிமுகப்படுத்துதல் போன்ற வழிமுறைகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.
தனியார் எரிபொருள் நிறுவனங்கள் பல்வேறு முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தாலும், நுகர்வோரின் நலனுக்கு முன்னுரிமை அளித்தே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
எரிபொருள் விலை திருத்தங்கள் பொதுவாக ஒவ்வொரு மாத இறுதியிலும் மேற்கொள்ளப்படுவதாக நினைவூட்டிய அமைச்சர் அனுர கருணாதிலக்க, சந்தை நிலைமைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனான ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த மாத இறுதியில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.













