நாடளாவிய ரீதியில் நேற்றைய (14) தினம் இடம்பெற்ற பல பாரதூரமான வீதி விபத்துகளில் ஐந்து (05) பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிந்த, ஹபரண, அனுராதபுரம், மெதவச்சிய மற்றும் ஹக்மண ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இருந்து இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
- கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலமுல்ல:
கிரிந்த – திஸ்ஸமஹாராம வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகிச் சென்றதில் இடம்பெற்ற விபத்தில், கெகிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.
- ஹபரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுத் ஓயா:
ஹபரண – கந்தளாய் வீதியில் கார் ஒன்றை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல், எதிர்திசையில் வந்த லொறி ஒன்றுடன் மோதியதில், அக்போபுர பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- அனுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலியபுர:
அனுராதபுரம் – ரம்பேவ வீதியில் முன்னால் பயணித்த பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது, மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில், சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்துள்ளார்.
- மதவச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிகல்வெவ:
ஹொரவப்பொத்தான – மதவச்சி வீதியில் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாயொன்றில் கவிழ்ந்ததில் இடம்பெற்ற விபத்தில், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், காயமடைந்த மற்றுமொரு பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.
- ஹக்மண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரதொட்ட:
ஹக்மண – கரதொட்ட வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி சறுக்கிச் சென்று மின்சாரக் கம்பத்தில் மோதியதில், ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி விபத்துக்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













