நாட்டின் பல முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் அதிகமாகவே இருந்தாலும், எந்தவொரு ஆறும் வெள்ள அபாய நிலையை எட்டும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போது இல்லை என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பல முக்கிய ஆற்றுப் படுகைகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.
ஜின் கங்கையின் (Gin Ganga) கீழ் பகுதியில் உள்ள பத்தேகமவுக்கு (Baddegama) அருகிலுள்ள பல இடங்களில் சுமார் 125 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
களு கங்கையின் (Kalu Ganga) வடிநிலப் பகுதியான இரத்தினபுரியில் சுமார் 75 மி.மீ மழையும், கீழ் வடிநிலப் பகுதியான கேஸ்பேவ (Kesbewa) அருகிலுள்ள பகுதிகளில் சுமார் 100 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்புக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் சுமார் 100 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேல் மகாவலி ஆற்றுப் படுகையைச் சேர்ந்த பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் 50 மி.மீ முதல் 75 மி.மீ வரையிலான மழையளவும், அதேவேளையில் அம்பாறையில் உள்ள கல் ஓயா ஆற்றுப் படுகைக்கு அருகிலுள்ள பகுதிகளில் 100 மி.மீ-ஐ நெருங்கும் அளவிலான மழையளவும் பதிவாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், அதேவேளை அனுராதபுர மாவட்டத்தின் பல பகுதிகளில் 40 மி.மீ-க்கு அண்மையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பெரும்பாலான ஆறுகளில் நீர்மட்டத்தில் தற்போது எந்தவிதமான விரைவான உயர்வும் காணப்படவில்லை என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
ஈரப்பத வலயங்களில் உள்ள ஜின், நில்வல மற்றும் காளு ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றில் நீர்மட்டம் அதிகமாக இருந்தாலும், அவை வெள்ள அபாய நிலையை எட்டும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போது இல்லை.
இருப்பினும், அப்பகுதிகளில் மேலும் கணிசமான அளவு மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நீர்ப்பாசணத் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.













