இன்று (16) அதிகாலை சுமார் 4:30 மணியளவில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒரு பெண்ணும் அவரது மருமகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரத்திற்குச் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக, களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ள நடைமேடையை அடைய ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மருதானையிலிருந்து காலி நோக்கிச் சென்ற ரயில் அவர்கள் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரயில்வே அதிகாரி ஒருவரின் தகவலின்படி, அந்தப் பெண், அவரது மகள் மற்றும் மற்றொரு பெண் உறவினர் ஆகியோர் அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஒரு மத நிகழ்வில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தனர். இச்சம்பவத்தில் அந்தப் பெண்ணும் அவரது மருமகளும் உயிரிழந்தனர்.
அக்குழுவினர் பாதுகாப்பற்ற முறையில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோதே ரயிலில் மோதப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த இரு பெண்களின் உடல்களும் களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக நடவடிக்கைகளுக்காக அவை களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இச் சம்பவம் குறித்து களுத்துறை தெற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













