இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கொள்முதல் நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய் மற்றும் அடிப்படையற்றவை என இலங்கை பொலிஸ் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
“கான்ஸ்டபிள் புஞ்ஞசோமவின் ஊழல்கள் இதோ, காலணி பாலிஷ் டின்னிலும் மோசடி, உலகத்தால் தடைசெய்யப்பட்ட ஹைடெரா நிறுவனத்துடனும் டீல்” எனும் தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி தொடர்பிலேயே பொலிஸ் தலைமையகம் இக் தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் பயன்பாட்டிற்கான காலணி பாலிஷ் டின்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கை, பத்திரிகை விளம்பரங்கள் மூலம் முறைப்படியான அரசாங்கக் கொள்முதல் விதிகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்களில் குறைந்த விலையைக் கோரிய நிறுவனத்திற்கே இக் குத்தகை வெளிப்படையாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் எந்தவித தனிப்பட்ட விருப்பங்களோ அல்லது ஊழல்களோ இடம்பெறவில்லை எனப் பொலிஸ் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டிற்காக உடலில் அணியும் கேமராக்களைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடைமுறைகள் மட்டுமே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக 26 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதுடன், 15 நிறுவனங்கள் மாதிரிப் பொருட்களைச் சமர்ப்பித்துள்ளன. எனினும், இதுவரையில் எந்தவொரு நிறுவனத்திற்கும் இக் குத்தகை வழங்கப்படவில்லை என்றும், அது தற்போது மதிப்பீட்டுக்குழுவின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரினதும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினதும் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையிலும் இவ்வாறான போலிச் செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.














