2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் இந்த வாரம் ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அட்டவணைப்படி, நடனம் (தேசிய மற்றும் பரதநாட்டியம்), சங்கீதம் (கீழத்தேய, கர்நாடக மற்றும் மேலத்தேய) மற்றும் நாடகம் மற்றும் அரங்கியல் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகியவற்றுக்கான செயல்முறைப் பரீட்சைகள் 2026 செப்டம்பர் 24 முதல் ஒக்டோபர் 3 வரை நடைபெறும்.
பொறியியல் தொழில்நுட்பப் பாடத்திற்கான செயல்முறைப் பரீட்சை செப்டம்பர் 30 முதல் ஒக்டோபர் 10 வரையிலும், மனைப் பொருளியல் பாடத்திற்கான பரீட்சைகள் ஒக்டோபர் 10 முதல் ஒக்டோபர் 20 வரையிலும் நடைபெறும்.
உயிர் முறைமைகள் தொழில்நுட்பப் பாடத்திற்கான செயல்முறைப் பரீட்சை ஒக்டோபர் 17 மற்றும் ஒக்டோபர் 21 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெறவுள்ளன.
குறித்த பரீட்சைகளுக்கான பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்தப் பாடசாலை அதிபர்களிடம் வழங்கப்படும் என்றும், தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் பரீட்சைகள் தொடங்குவதற்கு முன்னதாகவே அவர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், செயல்முறைப் பரீட்சைகளை தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக, விண்ணப்பதாரர்கள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விசாரணைகளுக்கு, 1911 என்ற அவசர அழைப்பு எண் மூலமாகவோ அல்லது 0112785922, 0112784537, 0112786616 மற்றும் 0112784208 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ பரீட்சைகள் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளலாம்.
gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் வினாக்களை முன்வைக்கலாம்.













