தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது முக்கியத் தேர்தல் வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றும் வகையில், பச்சிளம் குழந்தைகளுக்கான 22 காரட் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை (‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’) இன்று தொடங்கி வைத்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்த விஜய், குழந்தைகளைச் சிறிது நேரம் கையில் ஏந்தி, அவர்களுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்தார்.
இத்திட்டத்திற்காக அரசு 755.83 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கியுள்ளது.
தாய்மையைக் கௌரவித்தல், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பொது சுகாதார சேவைகளை நோக்கி அதிகக் குடும்பங்களை ஈர்ப்பதன் மூலம் மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்வதை ஊக்குவித்தல் ஆகியவை இந்த நலத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
முதலமைச்சரின் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கருத்தில் கொண்டு, விமான நிலையம் முதல் நகரம் முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல்துறை செய்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் உள்ளூர் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கான இத்திட்டத்தின் முதற்கட்ட அமுலாக்கத்திற்காக, மாநில அரசு ஏற்கனவே 1.28 லட்சம் தங்க மோதிரங்களை கொள்முதல் செய்துள்ளது.
2026 ஜூன் 22, அன்று அல்லது அதற்குப் பிறகு பிறக்கும் தகுதியுள்ள குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.
















