கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதியை மறித்து நள்ளிரவில் உலா வந்த காட்டு யானைகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இன்று அதிகாலை (25.10.2026) சுமார் 2:30 மணியளவில் கல்முனை அலியார் வீதிப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளன. பிரதான வீதியைக் கடந்து குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானைகள், அங்குள்ள சதோச (Sathosa) விற்பனை நிலையத்தின் களஞ்சிய சாலையைச் சேதப்படுத்தியுள்ளன.
யானைகளின் தாக்குதலில் சதோச களஞ்சியத்தின் முன்பக்கக் கதவு மற்றும் அருகாமையில் இருந்த பாதுகாப்புச் சுவர் என்பன முற்றிலும் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் யானைகளால் நாசம் செய்யப்பட்டுள்ளன.
இரவு நேரத்தில் பிரதான வீதியிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் காட்டு யானைகள் சுதந்திரமாக உலா வருவதால், அப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டதுடன் பொதுமக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
காட்டு யானைகளின் இந்த ஊடுருவலைத் தடுக்க வனஜீவராசிகள் திணைக்களமும் அதிகாரிகளும் உடனடியாக நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.














