மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.
குறித்த விசேட குழு அதன் தலைவர், அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கருத்துக்கள் பெறப்பட்டன.
இதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் தாஹிர் மரிக்காரும், புதிய சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நுவன் பெல்லந்துடாவவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் தத்தமது கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைத்தனர்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் முறை தொடர்பில் ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதே இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.
இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சட்டத்தரணி சுனில் வட்டகல, முனீர் முலாபரும், குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், தர்மப்பிரிய விஜேசிங்க, சமன்மலி குணசிங்க மற்றும் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.














