த.ரஸ்மிலா
பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான புதிய உணவு, பான வர்த்தக ஒப்பந்தம், பிரித்தானியாவின் சிறு, நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்குப் பெரும் நன்மைகளை ஏற்படுத்தும் என வர்த்தகத் துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் நிலவி வந்த அதிகப்படியான ஆவண நடைமுறைகள், சான்றிதழ் தேவைகள், எல்லைச் சோதனைத் தாமதங்கள் என்பன குறைக்கப்படவுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் 55% இலாப இழப்பைச் சந்தித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், 79% சிறு, நடுத்தர நிறுவனங்கள் நிர்வாக நடைமுறைகளைக் குறைப்பதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என நம்புகின்றன.
இந்த ஒப்பந்தம் மூலம் பிரித்தானிய மாட்டிறைச்சி, பாலாடைக்கட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவின் உணவு, பான உற்பத்தித் துறை 3.7 மில்லியன் வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், அதன் ஏற்றுமதியில் 58% ஐரோப்பியச் சந்தையைச் சார்ந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் பிரித்தானியப் பொருளாதாரத்துக்கு 5.1 பில்லியன் பவுண்ஸ் வரை மேலதிக வருவாயை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















