டிலுக்ஷா
பிரித்தானியாவில் பாதுகாப்புப் பணியாளர்களைப் போன்று வேடமிட்டு செயற்படும் தீவிர வலதுசாரிக் குழுவொன்றை பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.
பிரிட்டிஷ் செக்யூரிட்டி யுகே (British Security UK) எனப்படும் இந்தக் குழுவின் உறுப்பினர்கள், கறுப்பு நிறச் சீருடைகள் மற்றும் உடல் கவசங்களை அணிந்து, பாதுகாப்புப் பணியாளர்களைப் போன்று பொதுமக்கள் மத்தியில் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், இங்கிலாந்தின் சஃபொக் (Suffolk) பகுதியில் நடைபெற்ற முஸ்லிம்களின் பெருமளவிலான ஒன்றுகூடல் நிகழ்வுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இந்தக் குழுவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்ற அந்நிகழ்வு, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகப் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய இடைநிறுத்தப்பட்டதுடன், பங்கேற்பாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குற்றச்சாட்டுகள் இன்றி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குழுவினர் குறித்த நிகழ்வை ட்ரோன் மூலம் காணொளியாகப் பதிவு செய்து, அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தக் குழுவினர் டொமி ரொபின்சன் (Tommy Robinson) உள்ளிட்ட தீவிர வலதுசாரி அரசியல் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.













