வடக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 64பேர் காயமடைந்துள்ளனர்.
7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட தீவான வடக்கு லுசோனை நேற்று (புதன்கிழமை) காலை 8:43 மணியளவில் தாக்கியது.
டோலோரஸ் என்ற சிறிய நகரத்திலிருந்து தென்கிழக்கே 13 கிலோமீட்டர்கள் (8 மைல்கள்) அதன் மையப்பகுதி, 10 கிலோமீட்டர்கள் (6.2 மைல்கள்) ஆழத்தில் இருந்தது, அதன் தாக்கம் தலைநகர் மணிலாவில் உணரப்பட்டது.
உட்துறை செயலாளர் பெஞ்சமின் அபலோஸ் ஜூனியர், நிலநடுக்கத்தை தொடர்ந்து, 58 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாகவும், 15 மாகாணங்களில் 200க்கும் மேற்பட்ட நகரங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
புவித் தகடுகள் ஒன்றோடு ஒன்று உராயும் – ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் – பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
கடந்த 1990ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர்.
இது தவிர, பிலிப்பைன்ஸ் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 புயல்களை சந்தித்து வருகிறது. இதன் மூலம், இயற்கைப் பேரிடர் அபாயம் அதிகம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் திகழ்கிறது.



















