வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாநகர சபையில், மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது , எதிர்வரும் 19 ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளதாகவும், வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ”வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.
ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பொலிஸார் மேற்கொள்ளவுள்ளதுடன் கண்காணிப்பு சுமார் 50 கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகனத் தரிப்பிட கட்டணங்கள் தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் யாழ் மாநகர சபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.





















