• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்!  -03

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்! -03

இளங்கோ  பாரதியின்   அழகிய அனுபவம்  3

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/05
in இந்தியா, சிறப்புக் கட்டுரைகள், தமிழகம், பிரதான செய்திகள்
78 1
A A
0
50
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இளங்கோ  பாரதியின்   அழகிய அனுபவம்  3

blank

சென்னையிலிருந்து பகல் பொழுதில் புறப்பட்ட   எமது  பயணம் திருச்சியில்       நிறைவுக்கு வந்தபோது நேரம் இரவு 8 மணியாகியிருந்தது.

இடையில் மதிய     உணவுக்காகவும்,  தேநீர் பருகவும் என இரண்டு இடங்களில் பஸ்ஸை விட்டிறங்கி   ஏறியதைத் தவிர வேறு எந்தவிதமான அலைச்சலும் இல்லை. ஆனாலும் அனைவரும்   உடல் சோர்ந்திருந்தோம்.

முதல் நாள் தான்  பங்கேற்பாளர்கள் அனைவரும் விமானப் பயணத்தை முடித்து   தமிழகம் வந்திருந்தோம்.  பயணக்களைப்பு, நாடுகளுக்கிடையிலுள்ள நேரவேறுபாடு ,   சரியான தூக்கமின்மை போன்ற காரணங்களும்  எமது அசதிக்குக் காரணங்களாய்   அமைந்திருந்தன.

 

blank

திருச்சி  நகரிலுள்ள’ ரம்யா’  ஹோட்டலில் நாம்  தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரவேற்புக்கூடத்தில் வழங்கப்பட்ட குளிர்பானத்தைப் பருகிக்கொண்டிருக்கையில்  இணைப்பாளர்கள் எமக்கான அறைகளை  ஒதுக்கி எமக்கு உதவுவதில் முனைப்பாக இருந்தனர்.

blank
பங்கேற்பாளர்கள்
blank
பங்கேற்பாளர்கள்

பங்கேற்பாளர்கள்  ஒவ்வொருவரதும்  பயணப் பொதிகளை   பஸ்ஸிலிருந்து  இறக்கி உரியவரிடம்  ஒப்படைப்பதில் இணைப்பாளர்களான  திரு. ஷெபின் , திரு. இந்திரகுமார் மற்றும்  திரு. கார்த்திகேயன்  ஆகியோர்  மிகுந்த பிரயத்தனம் மேற்கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவருக்கும் பெரிதும் சிறிதுமாக இரண்டு பயணப்பொதிகள். அவற்றை  ஒவ்வொருநாளும்  தங்குமிடங்களிலெல்லாம் பஸ்ஸிலிருந்து இறக்கி ஏற்றுவதில் உண்டான சிரமங்களைக் கருத்தில் கொண்டு 3 நாட்களுக்குத் தேவையான பொருட்களை மாத்திரம்  சிறிய  பயணப்பொதியில்  எடுத்துக் கொள்ளுமாறு இணைப்பாளர்கள்  எங்களிடம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.

எமது  பயணப்பொதிகளை  எடுத்துக்கொண்டு  எமக்கென ஒதுக்கப்பட்டிருந்த  அறைகளுக்குள் புகுந்துகொண்டோம்.

blank

குளித்து, உடைமாற்றி,  இரவுணவை உட்கொண்டு,  உறங்குவதற்குத் தயாரான வேளை எமது தொலைபேசிகளுக்கு  ‘வாட்ஸ்அப்’ ஊடாக மறுநாளுக்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அறிவித்தல் ஒன்று  வந்திருந்தது.

காலையில் திருச்சி மாவட்ட  ஆட்சியருடனான  சந்திப்பின் பின்னர் உத்தியோக பூர்வமாக பண்பாட்டுப் பயணம் ஆரம்பித்து வைக்கப்படுமென்றும்,  நிகழ்ச்சியின்  நிறைவில் ஸ்ரீரங்கம் சென்று  அரங்கநாதரைத் தரிசிக்க இருக்கிறோம் என்றும் அடுத்து கல்லணையைப் பார்வையிட உள்ளோம் என்ற தகவலை  அது வெளிப்படுத்தியது.

தொடர்ந்து பயணிக்கவுள்ள இடங்கள் தொடர்பாக முன்னறிவு  பெற்றிருப்பது  பயணத்தின் விளைதிறனை அதிகரிக்கும் என்னும் நோக்கில் இணையத்தில் தேடலைத் தொடங்கினேன். எனது தேடல்கள் நீண்டுகொண்டே போயின. எமது பயணத்தின் பெறுமானமும் மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்தது…

முதலில் ஸ்ரீரங்கம் ஆலயம் தொடர்பான தேடல்களின் சுருக்கத்தைப்  பகிர்ந்துகொள்ள விளைகின்றேன்.

blank

திருச்சியில்  காவிரி மற்றும்  கொள்ளிடம்  ஆறுகளால் சூழப்பட்ட  தீவு நகரமே  ‘திருவரங்கம்‘   என்னும்  ‘ஸ்ரீரங்கமாகும்‘. காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவாகிய அரங்கத்தில் இறைவன் குடியிருப்பதால் இதை ஸ்ரீரங்கம் என்றும், இத்தலத்தில் அருளும் பெருமானை ஸ்ரீரங்கநாதன் எனவும், தாயாரை ரங்கநாயகி எனவும் அழைக்கிறார்கள்.

blank

திருவரங்கப்   பெரியகோயில்  156 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.   6,13,000 சதுரமீட்டர் பரப்பளவு கொண்டது. இவ்வாலயம்  ஏழு சுற்று மதில்களுக்குள்   அமைந்துள்ளது. இச்சுற்று மதில்களின் வாயில்களாக  21 கோபுரங்கள்  அமைந்துள்ளன. கோயிலிலிருந்து  நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில்  சுற்று மதில்களில் ஒரே வரிசையில்  கோபுரவாசல்கள் காணப்படுகின்றன.

கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள 4 மதில் சுற்றுக்களும்  கோயில் சார்ந்த  பயன்பாடுகளுக்கு  உரியவை ஆகும். வெளிப்புறமாகவுள்ள  மூன்று சுற்றுக்களில்  வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள்   என்பவைகொண்ட முழு நகரமும்  அடங்கியுள்ளது.

blank

இம் மதிற் சுற்றுக்களின் மையப்பகுதியில் அரங்கநாதசுவாமி  ஆலயம்  உள்ளது. அரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. விமானத்தின் மேல் நான்கு தங்கக் கலசங்கள் உள்ளன. பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார்.  வருடத்தில் 322 நாட்கள் விசேடம் நடக்கும் ஒரு ஆலயம் இதுவென்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.

blank

திருவரங்கம் கோவிலும், அதன் சுற்று  மண்டபங்களும் கலைப் பொக்கிஷங்களாக மிளிர்கின்றன.  இங்குள்ள கலைக்கூடத்தில்  பழங்கால உலோகச் சிற்பங்கள், வாள்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. 1966 இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் , பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ)இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்து, நிபுணர்களின் சேவையை அளித்து உதவியது. யுனெஸ்கோவின் உதவிமூலம்  ஆலயத்திலுள்ள சிற்பங்களும் ஓவியங்களும்  புதுப்பிக்கப்பட்டன.

blank

ஆலயவளாகத்தில் பன்னிரு ஆழ்வார்களில்  ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட  ஆயிரங்கால் மண்டபம்  உள்ளது. இம் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்களும் முழுமையாகக் கட்டிமுடிக்கப்படாமல்  951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.  மீதமிருக்கும் 49 தூண்களுக்குப்  பதிலீடாக வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மணல்வெளியில் 49  மரத்தூண்கள் நடப்பட்டு 1000 தூண்களுடன் விழா நடைபெற்று வருகிறது.

blank
ஆயிரங்கால் மண்டபம்

தமிழர் கட்டடக்கலை மரபினைப் பின்பற்றி சோழ மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட  ஆலயம் இதுவென்று கூறப்படுகின்றது.  600க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் 9ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டுவரை உள்ளன. இவற்றுள் 105 கல்வெட்டுக்கள் சோழர் காலத்தவை. முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், இராச ராசன்,  இராசேந்திரன், குலோத்துங்கன், விக்கிரம சோழர்களின் கொடைகள் இக் கல்வெட்டுக்களில் உள்ளன.

பிற்கால பாண்டியமன்னர்களும் ஓய்சாலர்களும் திருவரங்கத்தில் சிரத்தை காட்டினர். இஸ்லாமியர் படையெடுப்புக்களால்  இவ்வாலயம் கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.

15, 16 ஆம் நூற்றாண்டுகளில்  இவ்வாலயத்தில்  பல தெய்வங்களின் சந்நிதிகள் மீண்டும் புதுப்பித்து அமைக்கப்பட்டன. கோபுரங்கள் கட்டப்பட்டன. குறிப்பாக கோவில் விமானம் மீண்டும் கட்டப்பட்டு பொன் வேயப்பட்டது.

இவ்வாலயத்தில்  மகான் இராமானுஜரின்  சமாதி உள்ளது.  இவர் இவ்வாலயத்தின் நிர்வாக முறையை ஏற்படுத்தியவராவார்.  தனது 120 ஆவது வயதில்  பரமபதம் எய்தினார். பொதுவாக  வைணவ சம்பிரதாயப்படி  இறந்த துறவிகளின் உடலை  எரியூட்ட மாட்டார்கள். அதற்குப்பதில் உடல் பள்ளியூட்டப்படும். அதாவது உடல் சமாதியில் அமரவைத்து  மூடப்படும். அதேபோல இராமானுஜரின் உடல் ஸ்ரீரங்கத்தின்  வசந்த மண்டபத்தில் பள்ளிப்படுத்தப்பட்டுள்ளது.

blank
இராமானுஜர்

அங்கே இருக்கும் சிறிஇராமானுஜரின் உடல் இன்றும் உயிரோட்டத்துடன் காட்சியளிக்கிறது. இராமானுஜரின் உடல் பச்சைக்கற்பூரம்  மற்றும் குங்குமத்தால் செய்யப்பட்ட  கலவையால் மூடப்பட்டுள்ளது. 900 ஆண்டுகள் கடந்தும் இவ்  உடல் அப்படியே காட்சி தருவது  அதிசயமாகும்.

இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி வைக்கும்  மரபு  எகிப்தியர்களிடமிருந்து  வந்ததாகக்  கூறப்படும் நிலையில்  900 வருடங்களுக்கு  மேலாக  தமிழர்கள்  மத்தியிலும் இறந்தவர்களின் உடலைப்பதப்படுத்தி வைக்கும் மரபு இருந்தமைக்கு இராமானுஜரின் சமாதி சிறந்த ஒரு எடுத்துக் காட்டாகும்.

 ஐந்து குழி மூன்று வாசல்

ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் சந்நிதிக்கு அருகில்  உள்ள ஐந்து குழி மூன்று வாசல்  அதிசயம் நிறைந்தது. இங்கிருக்கும் ஐந்து குழிகளிலும்  ஐந்து விரல்களைவிட்டுப் பார்க்கும்போது பரமபத வாசல் தெரியும். இப்படித்தான் தாயார் பெருமாளை வணங்குகிறார் என்பது ஐதீகம்

blank
ஐந்துகுழி  மூன்று வாசல்
blank
பரமபத வாசல்

நெற் களஞ்சியங்கள்  

இவ்வாலய வளாகத்தில் நெல்லைப் பேணி வைப்பதற்குரிய  களஞ்சியங்கள் உள்ளன.  .20 அடி விட்டமும் 30 அடி  உயரமும் கொண்ட நெற்குதிர்கள் சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில் இருக்கின்றது.1000 ஆண்டுகளுக்கு  முன்னர் அமைந்த இந்த நெல் சேமிப்புக் கிடங்குகள்  வட்ட வடிவம் கொண்டவை. மொத்தமாக 1500 தொன் எடை கொண்ட நெல்லை இதில் சேமிக்க முடியும் .

blank

அடிக்கடி வெள்ளப்பெருக்கினால் பாதிப்படையக்கூடிய  ஓர் இடத்தில்  இவ்வாறான  நெற்களஞ்சியங்களை  அமைத்ததன்மூலம்  எமது முன்னோர் எவ்வாறு  தூரநோக்குடன் செயற்பட்டனர்  என்பதை அறியக்கூடியதாய்  உள்ளது.

blank

கரிகாலன் கல்லணை

இக் கல்லணையின் நீளம் 1080 அடி.அகலம்  66அடி. உயரம் 18அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன்  காணப்படுகிறது.

திருச்சியிலிருந்து  15 கிலோ மீட்டர்  தூரத்தில் இக் கல்லணை  உள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை  தோகூர் கிராமத்தில்  அமைந்துள்ளது.

திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பு என்னுமிடத்தில் வடபுறமாக கொள்ளிடம்  தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது. காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில்  திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது.

காவிரி ஆறானது  உள்ளாறு ,  காவிரி, வெண்ணாறு , புது ஆறு  என 4ஆகப் பிரிகிறது. உள்ளாறு மீண்டும் கொள்ளிடத்தில்  இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை  கட்டப்பட்டுள்ளது.

blank

பாசன காலங்களில் காவிரி , வெண்ணாறு, புதுஆறு , ஆகியவற்றிலும் வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையிலிருந்து திறந்து விடப்படும். அதாவது வெள்ளக்காலங்களில் கல்லணைக்குவரும் நீர்  காவிரிக்கு இடதுபுறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி  விடப்படும்.எனவே தஞ்சாவூர் , நாகபட்டினம்  மாவட்டத்தின்  பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்படுகிறது.

இக்கல்லணையை  கரிகாலன் என்ற சோழமன்னன்  முதலாம் நூற்றாண்டில் கட்டியதாக வரலாறு  கூறுகிறது.  கரிகால் சோழமன்னன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு  அதைத்தடுக்க ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். அதற்கான செயற்பாடுகளையும்  முன்னெடுத்தான்.

blank
சோழமன்னன் கரிகாலன்

காவிரி ஆற்றின்மீது பெரிய பாறைகளை படகு மூலம் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன்மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத  ஒருவித ஒட்டும் களிமண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக்  கட்டப் பயன்படுத்தப்பட்ட  தொழில் நுட்பமாகும். இக்கல்லணையின்மீது ஆங்கிலேயர் ஆட்சியில் பாலம் ஒன்று  கட்டப்பட்டுள்ளது.

blank

இந்திய நீர்ப்பாசனத்தின்  தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன்  என்ற ஆங்கிலப் பொறியியலாளர் கல்லணையைப் பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார் .

கல்லணை பலகாலம் மணல்மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது .ஒருங்கிணைந்த தஞ்சைமாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில்  1829 இல் காவிரி பாசன பகுதி தனிப்பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் இவர் நியமிக்கப்பட்டார். இவர்தான்  பயனற்று இருந்த கல்லணையை தைரியமாக சிறுசிறு பகுதியாகப்பிரித்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர்  பழந்தமிழரின் அணைகட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும்  உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார்.

blank
சர் ஆர்தர் காட்டன்

இப்பகுதியில் பாசனத்துக்கு முதன்மையான ஆறு காவிரி.1800ஆம் ஆண்டுகளிலேயே  6இலட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு  பாசனம் செய்துகொண்டிருந்தது . சாதாரண காலங்களில் காவிரி நீரை ஆழமாகவும் வேகமாகவும்  ஓடும்  கொள்ளிடத்திலிருந்து  தடுத்து வைப்பதுதான் கல்லணையின் முக்கிய செயல்பாடு.ஆனால்  வெள்ளம் வந்தால்  அதைப் பாதுகாப்பாக காவிரியில்  இருந்து திருப்பி கடலில் கொண்டு சேர்க்க  வழி செய்வதுவும்தான் அதன் பணியாகிறது. அருகே  வேறு எந்தக் கட்டமைப்பின் உதவியும் இல்லாமல்  கல்லணை இந்த செயற்பாட்டை  சுமார் 2000 ஆண்டுகளாகச் செய்துகொண்டிருக்கிறது..

தொழிநுட்பம்  விருத்தியடைந்திராத  பண்டைக்காலத்தில் மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில் நுட்பம்  இன்றுவரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.

பல இடங்களிலிருந்து ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால் இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

*************************************************************************************************

30.12.2024 அன்று நாம்  பார்வையிடவிருந்த  கலாசார மற்றும் வரலாற்று அற்புதங்கள்  நிறைந்த  இரு இடங்கள் தொடர்பாகவும் எனது அறிவை சற்று விசாலப்படுத்திக்கொண்டு படுக்கைக்குச் சென்றேன். உடல் அசதியினாலோ என்னமோ  சில நிமிடங்களில்  உறங்கியும் போனேன்.

புதிதாய் மலர்ந்த மற்றொரு காலைப்பொழுதில் அதிகாலையில் எழுந்து  தயாரானேன். காலை உணவு நாம் தங்கியிருந்த ரம்யா ஹோட்டலின்  மேல் தளத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

blank

2025 ஆம் ஆண்டு  புதுவருடம் பிறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த  நிலையில்  புதுவருடத்தை வரவேற்கும் வகையில் ஹோட்டல் விழாக்கோலம் பூண்டிருந்தது. முதல்நாள் இரவு பயணக்  களைப்பினால் இரசிக்க முடியாமல்போன ஹோட்டலின் அழகினை  பகல்நேர   வெளிச்சத்தில் கண்டுகளிக்க முடிந்தது.

வகை வகையான  பாரம்பரிய மற்றும் நவீன உணவுகள் காலை ஆகாரமாக எமது பசிதீர்க்கக் காத்துக் கிடந்தன. விரும்பியதைத்  தேர்ந்தெடுத்து சுவைத்து மகிழ்ந்தோம்.

blank
பங்கேற்பாளர்கள்

blank

இந்த இடத்தில் நான் பெரிதும் இரசித்துச் சுவைத்த ஓர் உணவுபற்றிக் குறிப்பிட்டே  ஆக வேண்டும். பால் கொழுக்கட்டையென்று பெயர் குறிப்பிடப்பட்ட  ஓர் உணவை  விருப்பம் மேலிட  எடுத்து உண்ண ஆரம்பித்தேன். சுவைக்கச்   சுவைக்க அது அமிர்தமாகவே எனக்குத் தோன்றியது. இலங்கையில் இவ்வுணவை நான் எங்குமே கண்டதுமில்லை. இதற்கு முன்னர் சுவைத்த அனுபவமும் இல்லை. தித்திப்பான அந்த உணவை உண்ட நினைவுகளும்கூடத் தித்திப்பானவைதான்…

blank
பால் கொழுக்கட்டை

காலை 9 மணியளவில்  திருச்சி மாவட்ட  ஆட்சியர்  திரு .பிரதீப் குமார்  ஐஏஎஸ்  அவர்களுடனான  சந்திப்பு  ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது. அச்சந்திப்பின்போது  திரு பிரதீப் குமார் அவர்கள் திருச்சியின் வரலாற்றுச் சிறப்பையும்  கலாசார முக்கியத்துவத்தையும்  விவரித்துப் பேசினார். அவரது பேச்சுத் திறனும் அன்பான வார்த்தைகளும் எம்மை நெகிழச் செய்தன. நாம் பார்வையிடவுள்ள  இடங்கள்  தொடர்பான  எமது சந்தேகங்களுக்குப் பொறுமையுடன்  பதிலளித்ததோடு நிகழ்ச்சிகளின் நிறைவில் ‘வேர்களைத்தேடி…’  பண்பாட்டுப் பயணத்தை  கொடியசைத்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

blank

blank

blank
மாவட்ட ஆட்சியர்

உற்சாகமாக , உல்லாசமாக , மகிழ்ச்சி ஆர்ப்பரிப்புடன் எமது பயணம் தொடங்கியது. இத்தருணத்தில் எம்முடன் இணைந்து பயணித்த இணைப்பாளர்களில்  ஒருவரான திருமிகு  கனிமொழி அவர்களை   அறிமுகம் செய்து வைப்பது மிகவும் பொருத்தமாகும்.

கனிமொழியவர்கள் தனது பெயருக்கு ஏற்றபடி கனிவான மொழிபேசி எம்மைக் கவர்ந்திருந்தார். குறுகிய காலத்தில்  எம்மோடு அன்பு பாராட்டி  எமது குடும்பத்தவரில்  ஒருவர்   போன்று  நெருக்கமானவராக  ஆகியிருந்தார். கரிசனையோடு  எமது தேவைகளை  நிறைவேற்றினார்.  அவரோடு இணைந்து ஏனைய இணைப்பாளர்களும்  எம்மைச்  சிறப்பாக வழிநடத்தினர். அவர்களின்  அன்பு  மழையில் நனைந்து நாம் எமது சொந்தக் குடும்பத்தவரை மறந்திருந்தோம் என்பதுதான்  உண்மை.

blank
இணைப்பாளர் -திருமிகு கனிமொழி

குதூகலத்துடன் ஆரம்பமான எமது  பண்பாட்டுப் பயணம் ஸ்ரீறிரங்கம்  ஆலயத்தின் கோபுரதரிசனம் கண்ட மாத்திரத்தே அமைதியில் அடங்கிப் போனது. பரவசத்தால் உடல் சிலிர்த்தது. எம்மையறியாமல் ஒரு மௌனத்திரை எம்மை மூடிக்கொண்டது. நெஞ்சக் கூட்டுக்குள் உறங்கிக்கிடந்த  இறைபக்தி மேலெழுந்து சிறிரங்கநாதரின் தரிசனம் காண எம்மைத்  தயார் படுத்தியது.

blank

இவ்விடத்தில் தமிழக  அரசின் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த  உத்தியோகத்தர் திருவாளர் கணேஸ் அவர்களைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். இணைப்பாளர் கனிமொழியைப்போல அவரும் இப் பயணம் முடியும் மட்டும் எம்மோடு கூடவே இருந்து நாம் பார்வையிடச்சென்ற இடங்களைப்பற்றிய தகவல்களை   வழங்கிக் கொண்டிருந்தார். பஸ்ஸில் அனைவரும் அமர்ந்ததும் ஒலிவாங்கியின் ஊடாக நாம் செல்லுமிடங்கள்பற்றி  விளக்கமளிப்பதை அவர் ஒரு கடமையாகவே ஏற்றிருந்தார். இணையத்தினூடான எமது தேடல்களுக்கு மேலதிகமாக அவர் கொடுத்த விளக்கங்கள்  எமது பயணத்தை மேலும் அர்த்த முடையதாக்கின.

இத்தருணத்தில்  இப்பயணத்தில் எம்மோடு  இணைந்திருந்த புகைப்படக் கலைஞர்களைப் பற்றியும்  குறிப்பிட்டாக வேண்டும். திரு  சரவணன் ,திரு . ராம் மற்றும்  இரு புகைப்படக் கலைஞர்களும் எம்மோடு இணைந்திருந்தனர். நட்பு பாராட்டினர். ஒவ்வொருநாளும் எம்முடன் வந்து எமது பயணத்தை ஆவணப்படுத்தும் பணியை அவர்கள் செம்மையாக நிறைவேற்றினர்.

இலங்கையில்  பொதுவாக சைவ ஆலயங்களுக்குச் செல்வோர்  செல்லுமுன் கால்களைக் கழுவிச்செல்லும்  மரபு உண்டு. அதற்கான  வசதிகள்  ஆலய முன்றலில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அந்தவகையில்  கால்கழுவ நீரைத்தேடி  எனது கண்கள் அலைந்தன. ஸ்ரீரங்கத்தில்  அவ்வாறான ஒரு அமைப்பு காணப்படவில்லை.  சனப்புழக்கம்  அதிகமான ஆலயங்களில்  கால்களைக் கழுவிச் செல்லும்  நடைமுறை   சுற்றுச்சூழலின்    அழகைக் குலைக்கலாம்  என்பதைப் புரிந்துகொண்டேன்.

blank

ஆலய  வாசலில் பூக்கள் விற்கும் பெண்களைக் கண்டதும்  எம்மோடு பயணித்த  பெண் பிள்ளைகளுக்கு  கூந்தலில் பூச்சூடும்  ஆசை பிறந்தது. இலங்கையைச் சேர்ந்தவரும்  தற்போது  வெளிநாடொன்றில்  வசிப்பவருமான  பங்கேற்பாளர்  ஒருவர்  பூக்கள் விற்கும்  பெண்ணொருவரை  அணுகி ” மயிருக்கு வைக்க பூ தாருங்கள் ” என்று கேட்டார்.  தமிழகத்தில்  மயிர் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாகப் புரிந்து கொள்ளப்படும்  என்று புரியாமல் அவர்  இவ்வாறு கேட்டதும்  அப்பெண்மணி  திருதிரு என்று முழித்ததும்  எம்மால்  மறக்க முடியாத  அனுபவங்கள்.

blank

இணைப்பாளர்கள் ஆலயத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் ஒவ்வொன்றையும்பற்றியும்  விளக்கியவர்களாக முன்செல்ல அவர்களைப் பின் தொடர்ந்து நாம் சென்றோம். சில இடங்களில் பக்தி மேலிடத் தொழுதோம். சில இடங்களில் மெய்மறந்து நின்றோம். இன்னும் சில இடங்களில் ‘வேர்களைததேடி…’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கிடைத்த எமது பேற்றினை எண்ணி அகம்  மலர்ந்தோம்.

blankblank

ஆலய வளாகத்தினுள்ளே  சுற்றிச்சுற்றி எமது கால்கள் துவண்டு போயின . ஒவ்வொரு கலைப்பொக்கிஷங்களையும் கண்டு நெஞ்சம் சிலிர்த்துப் போனது. ஒரு தமிழனாக , ஒரு இந்துவாக , எமது வேர்கள்  தமிழகத்தில் ஆழப்பதிந்ததன் பெருமிதத்தை நுகர்ந்தோம்…. இன்னுமின்னும் எத்தனையோ வண்ணமிகு எண்ணங்கள் என் நெஞ்சக்கூட்டுக்குள் சுற்றிச் சுற்றி வந்து வைகுண்ட வாசனின் தரிசனம் கண்ட நிறைவைத் தந்தன.

blank

இறைதரிசனம்  ஒருபுறம் என்றால் , அந்த தரிசனத்தைக் கலைப் பொக்கிஷமாக உருவாக்கித் தந்த எம் முன்னோர்களின் கலையார்வம்,   சிந்தனைத் தெளிவு, செயற்பாட்டு ஆற்றல் அனைத்துமே பெருமிதத்தின் உச்சிக்கு எம்மை அழைத்துச் சென்றிருந்தன. கூடவே நாம் பெற்ற இன்பத்தை எமது அன்புக்குரிய குடும்பத்தவர்கள் பெறவில்லையே என்ற ஏக்கமும் பிறந்தது.

blank

தாய்ப்பசுவைப் பிரியமுடியாமல் தவிக்கும் கன்றுகளைப்போல அரங்கநாதனின் ஆலயத்தை விட்டு நீங்க மனமில்லாதவர்களாக நாம் வெளியே வந்தபோது நேரம் மதியமாகியிருந்தது.

பாரம்பரிய  தமிழ் உணவுவகைகளைக் கொண்ட ‘பனானா லீவ்’  உணவகத்தில்   மதியபோசனத்தை … முடித்துக்கொண்டு கல்லணையைப் பார்வையிடச் சென்றோம்.

blank

சிறிரங்கம்   ஆலயத்தின் பிரமாண்டத்திற்கும்  கல்லணையின்  தொழில் நுட்ப வளமைக்கும்  மத்தியில் நின்று நாம் தமிழர் என்ற உணர்வில் சிலிர்த்த தருணங்கள் என் வாழ்க்கைப் பயணத்தில்   என்றென்றும் மறக்க முடியாதவை. பசுமையாய்… நிலைத்து நிற்பவை.

கல்லணையைப்  பார்வையிடச்  சென்றவேளை  அங்கு திருச்சி நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளால்  அவர்களது  அலுவலகத்தில் வரவேற்கப் பட்டோம். உயர் அதிகாரியொருவர் கல்லணையின்  வரைபடத்தைக்காட்டி  அதன் கட்டமைப்பை விளக்கினார்.

தொழிநுட்ப அறிவு விருத்தியில்லாத அந்தக் காலத்தில்   உருவாக்கப்பட்ட  அணையின்  கட்டுமானம்,  அதன் தாங்குதிறன் என்பவைபற்றி  அவர் விவரித்தது   எம்மை வியப்பில் ஆழ்த்தியது .

அந்த  அலுவலகத்தில் இருந்தே  கல்லணையைத்  துல்லியமாகப்  பார்க்க முடிந்தது.. பின்னர்   கல்லணையின் மேலுள்ள பாலத்தின் மேல் நடந்து சென்று பார்வையிட்டோம்.

blank

ஈற்றில் தேநீர் உபசாரம் இடம்பெற்றது. மிக்ஷர் , குலாப்ஜாம் , தேநீர் சுவைத்தோம். புகைப்படங்கள் எடுத்தோம்.

blank

கல்லணையைச் சுற்றிப்  பார்வையிட்டு முடிய மாலை  4 மணியாகி விட்டது. மதுரையை நோக்கித் திரும்பினோம்.

blank

மறுநாள் தமிழரின் இலக்கிய மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை   ஆராயும்  வகையில்  எமது பயணம் அமையப்போகிறது  என்பதும்   மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு இல்லம்,  மற்றும்   அவரது எட்டயபுர  இல்லத்தைத் தரிசிக்கப் போகிறோம்  என்பதும்   என்னை மகிழ்ச்சிப் பிரவாகத்தில் தள்ளியது . கரைகடந்தோடும்   காவிரி நீர் உடலை நனைத்ததுபோல சிலிர்த்துப் போனேன். அந்த   சிலிர்ப்பை நீங்களும்   அனுபவிக்க வேண்டாமா?

 

 

ஸ்ரீ ரங்கநாதசாமி கோயிலில் தரிசனம்

 

சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை 

 

 

 

Related

Tags: ChennaiIlango BharathyMK StalinNon Resident TamilsNRTReaching Your RootsTamil naduTNGovtஇளங்கோ பாரதிவேர்களைத் தேடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காசாவை அமெரிக்கா கைப்பற்ற விரும்புவதாக ட்ரம்ப் அறிவிப்பு!

Next Post

வன்முறை சம்பவ குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

Related Posts

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 
இலங்கை

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு
இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!
ஆசிரியர் தெரிவு

பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2025-12-01
நடிகை சமந்தாவுக்கு நடந்த ரகசிய திருமணம்!
சினிமா

நடிகை சமந்தாவுக்கு நடந்த ரகசிய திருமணம்!

2025-12-01
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2025-12-01
இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!
இலங்கை

இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!

2025-12-01
Next Post
வன்முறை சம்பவ குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

வன்முறை சம்பவ குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை கைது!

போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை கைது!

இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

0
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

0
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

0
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01

Recent News

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.