கொழும்பு – ப்ளூமெண்டல், சிறிசந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அருகில் நேற்று(18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, போதைப்பொருள் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றதாகத் தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் படி, டுபாயில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான சமிந்த உதயங்க எனப்படும் பொனிஸ்டா நிப்புனவின் குழுவினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
ப்ளூமெண்டல், சிறிசந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் 41 வயதான நபர் ஒருவர் மீது சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் நேற்று பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் சுகததாச விளையாட்டரங்கிற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 30 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














