
இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 13 (09.01.2025)
‘ வேர்களைத்தேடி ‘ பண்பாட்டுப் பயணத்தின் பன்னிரண்டாவது நாள்… நாளின் தொடக்கத்தில் தென்னிந்திய கலாசாரம் மற்றும் கட்டிடக்கலை பாரம்பரியத்துடன் இணைந்ததான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பெற்ற ‘தட்சின சேத்ரா’ அருங்காட்சியத்தைப் பார்வையிடுவதற்கு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம்.

18ஆம் ,19ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பெற்ற இந்த ‘தட்சின சேத்ரா ‘ பத்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பெற்ற 19 வீடுகளைத் தன்னகத்தே கொண்டது. மகாபலிபுரம் – சென்னை நெடுஞ்சாலையை அண்மித்ததாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்தினதும் கட்டடக்கலையினை வெளிப்படுத்துவதாக அமைந்த இவ் இல்லங்கள் அம் மாநிலங்களில் வாழ்ந்த பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் வகையில் ஒழுங்கமைக்கப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். இவற்றைப் பார்வையிடுவோர் பண்டைய தென்னிந்திய மக்களின் வாழ்க்கைப் பாங்கு மற்றும் அவர்களின் கலை, கலாசாரம் , கைவினைப்பொருட்கள் ,நெசவுத்தொழில் போன்றவற்றோடு அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் உபகரணங்களையும் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

‘ தட்சின சேத்ரா’ வெறுமனே ஒரு அருங்காட்சியகமாக மாத்திரம் இயங்காமல் கலை, கலாசார , பண்பாட்டு விழுமியங்களை பிற்பட்ட சமுதாயத்துக்குக் கடத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. வருடம் முழுவதும் பல்வேறுபட்ட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைத் திட்டமிட்டு நடத்தி வருவதோடு, சமூகம் சார்ந்த நிகழ்வுகளை அங்கு நிகழ்த்த விரும்புவோருக்கு அதற்கான இட அனுமதியும் வழங்கிவருவது சிறப்பாகும்.
‘தட்சின சேத்ராவிலுள்ள’ 19 வீடுகளையும் ஒரே நாளில், அதுவும் சிலமணி நேரங்களில் பார்வையிட்டு மீள்வதென்பது சற்றுச் சிரமமானதொரு செயலாகும். அதனால் ஒவ்வொரு மாநிலம் சார்ந்த ஒவ்வொரு வீட்டினைத் தெரிவு செய்து பார்வையிட்டோம். நிறைவில் மதிய உணவு உண்பதற்குச் சென்றோம் .

‘தட்சின சேத்ராவின் ‘ உணவு விடுதிகளில் உணவுகள் காட்சிப்படுத்தியிருந்த விதம் புதியதொரு அனுபவத்தை வழங்கியிருந்தது. உணவுகளின் வகை மற்றும் அவற்றின் சுவையும்கூட சற்று வித்தியாசமானதாகவும் விரும்பத்தக்க விதத்திலும் அமைந்திருந்தன. கண்களுக்கும் நாவிற்கும் விருந்தளித்த உணவுகளைப் பசியாற உண்ட திருப்தியுடன் அங்கிருந்து புறப்பட்டோம்.
எமது பயணம் தமிழகத்தின் இயற்கை மற்றும் கடல் அற்புதங்களைக் கண்டு களிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் உள்ள ‘ சீ ஷெல் ‘ அருங்காட்சியகத்தை நோக்கி நகர்ந்தது.
…………………………………………..
‘சீ ஷெல் ‘ அருங்காட்சியகம்

கடல் வளம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அங்கு ஏராளமாகக் குவிந்து கிடக்கும் மீன்கள் , இறால்கள் மற்றும் நண்டுகள்தான். ஆனால் இவற்றுக்கு மேலதிகமாக கடலுக்கு அடியில் கிடக்கும் முருகைக்கற்பாறைகளையோ , சிற்பிகள் , சங்குகள் மற்றும் ஏனைய உயிரிகள் போன்றவற்றையோ நாம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.
ஆனால் கடல் அலைகள் வெளித்தள்ளும் இத்தகைய இயற்கை வளங்களைத் தேடியெடுத்து அவற்றிலிருந்து கண்களுக்கு விருந்து படைக்கும் கலைப்பொருட்களை உருவாக்கி , அவற்றினை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியிருப்பதானது உண்மையில் தமிழக அரசினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மெச்சத்தகுந்த செயற்பாடுகளில் ஒன்றாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.

நாம் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தவேளையிலிருந்து பார்வையிட்டு வெளியே வரும்வரை எம் உள்ளம் அடைந்த மகிழ்ச்சிக்கு நிகர் எதுவுமில்லை. கண்களில் பட்ட அனைத்துமே கலைவடிவங்கள்தான்… அவற்றின் கலை நுட்பங்களைக் கண்டு வியப்பதா ? …கற்பனை நயங்களைக் கண்டு சிலிர்ப்பதா ?… கைதேர்ந்த கலைஞர்களின் திறனை மெச்சுவதா ? …


இதுதான் சிறந்தது என்று ஒன்றை மட்டும் சுட்டிக் கூற முடியாதபடி எல்லாமே அழகின் உச்சத்தில் இருந்தன.

இலட்சோப இலட்சம் சிப்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை இனம்பிரித்து, ஒழுங்குற அடுக்கி , கலைநயம் மிக்க காட்சிப் பொருட்களை உருவாக்குவதென்பது உண்மையில் கைதேர்ந்த கலைஞர்களால் மாத்திரம் இயலுமானதாகும்.

தமிழகத்தின் ‘சீஷெல் ‘அருங்காட்சியகத்தில் நாம் பார்வையிட்ட கலைப்படைப்புகள் அத்தனையும் பிரமாண்டம் மிக்கவையாக… மனதைக் கவர்ந்தவையாக … ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் எம்மைத் திணற வைத்தன என்ற உண்மையை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.

தமிழக அரசின் ‘ வேர்களைத்தேடி’ நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றதன் மூலம் எமக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு உண்மையில் எமக்குக் கிடைத்த பேரதிஸ்டமேயன்றி வேறொன்றில்லை.
அருங்காட்சியகத்தில் நாம் கண்டுகளித்த அதிசயங்களை எமது கைப்பேசிக் கமராக்கள் உள்வாங்கிக் கொண்டன. அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு விட்டிருக்கிறேன். ” யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் “.என்ற வகையில்…
‘ சீ ஷெல் ‘ அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டதன் பின்னர் நாம் தங்கியிருந்த மாமல்லபுரம் ஹோட்டலுக்குத் திரும்பினோம்.
மாலைவேளை , கடற்கரையோரமாகத் திறந்தவெளியிலே தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் துணை இயக்குனர் திருமதி அருண்மொழி அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்மொழி மற்றும் கலாசாரத்தை டிஜிட்டல் தொழிநுட்பம் மூலம் மேம்படுத்தும் இந்தக் கழகத்தின் முயற்சிகள் பற்றிய முக்கியமான தகவல்களை பங்கேற்பாளர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.


‘ கடலின் அழகும் , தமிழின் பெருமையும் பங்கேற்பாளர்களுக்கு தமிழ்நாட்டின் செழுமையான பாரம்பரியத்தை உணர்த்தின. நிறைவோடு உறக்கத்தை அரவணைக்கத் தயாரானோம். எமது பயணமும் நிறைவுநாளை நெருங்கிக் கொண்டிருந்தது.ஒவ்வொரு தொடக்கத்துக்கும் ஒரு முடிவுப்புள்ளி அவசியம்தான் இல்லையா ? மற்றொரு பதிவில் சந்திக்கிறேன். அதுவரை காத்திருப்போமா ?



















