இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 14 (10. 01.2025)
“வேர்களைத்தேடி…” பண்பாட்டுப் பயணத்தின் பதின்மூன்றாவது நாள்…. வரலாற்றுச் சிறப்புமிக்க
மாமல்லபுரம் கோயில் மற்றும் பல்லவர்காலச் சிற்பங்களைப் பார்வையிட இருப்பதாக
இணைப்பாளர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து உற்சாகத்துடன் தயாரானோம்.
ஏற்கனவே எனது பதின்ம வயதில் உறவுகளுடன் மாமல்லபுரம் வந்த நினைவுகளுக்குள் மனம்
புதையுண்டபோதும் , அந்த எண்ணக்குவியலில் இருந்து விடுபட்டு இணையவழியில் தேடலைத்
தொடங்கினேன்.
மாமல்லபுரம் தொடர்பான எனது இணைய வழித்தேடலில் தெரிந்துகொண்ட பல பயனுள்ள விடயங்களை வாசகர் நன்மை கருதி இங்கு பதிவிடுகிறேன்.
மாமல்லபுரம்
தமிழ்நாடு மாநிலத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கழுக்குன்றம் ஊராட்சி
ஒன்றியத்தில் இருக்கும் பேரூராட்சி இது ஆகும். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய
துறைமுக நகரமாக விளங்கிய இது மகாபலிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
சென்னைக்குத் தெற்கே 62 கிலோமீட்டர் தொலைவிலும் காஞ்சிபுரத்திலிருந்து 67 கிலோமீட்டர்
தொலைவிலும் உள்ளது. இங்குள்ள கலைச்செல்வங்களைப் பார்வையிட உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் பெருமளவில் வந்து செல்கின்றனர்.
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்
மாமல்லபுரம் கடற்கரைக்கோயில் என்பது தமிழ்நாட்டில் முதன்முதலில் அமைக்கப்பட்ட
கட்டுமானக் கோயில் ஆகும்.இது இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது.
தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டுவரும் 440 புராதன சின்னங்களுள்
ஒன்றான இக்கோயில் 45அடி உயரம் கொண்டது.
இக்கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சிதரும் சோமாசுகந்தர் மற்றும் பள்ளிகொண்ட நிலையில் ஜலசயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சி தருகின்றனர்.
மாமல்லபுரத்தில் வங்காளவிரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் இது மாமல்லபுரம்
கடற்கரைக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது எட்டாம் நூற்றாண்டில்
கருங்கற்களைக்கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும்.
இக் கோயிலின் உருவாக்கத்தின்போது இந்த இடம் துறைமுகமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது
இந்த இடத்தைப் பல்லவ அரச மரபின் முதலாம் நரசிம்ம வர்மன் ஆண்டு கொண்டிருந்தார்.
இக்கடற்கரைக்கோயிலை 1984இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக
அறிவித்தது.
மார்க்கபோலோ மற்றும் அவருக்குப் பின் ஆசியாவிற்கு வருகைதந்த ஐரோப்பிய
வணிகர்கள் இந்த இடத்தை ஏழு அடுக்குத் தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு அடுக்கு
தூபிகளில் ஒன்று இந்தக் கடற்கரைக்கோயில் என்று நம்பப்படுகிறது.
7ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து மன்னன் இரண்டாம் நரசிம்ம வர்மன்
குகைக்கோயில்கள் மற்றும் இரதங்கள் உள்ளிட்ட பல கட்டடக் கலைப் படைப்புக்களை
ஆரம்பித்து வைத்தார்.
அந்த கட்டடக்கலைப் படைப்புகளின் உச்ச நிலையாக இந்த கட்டமைப்புக் கோயில் வளாகம் கருதப்படுகிறது. கடலில் மூழ்கிப்போன கோயில் வளாகங்களில் மீதமிருக்கும் கடைசி கோயில் வளாகம் என்று இது இப்போது ஊகிக்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது இந்தக்கோயில் வளாகத்துடன் தொடர்புடைய கடலில் மூழ்கிப்போன எஞ்சிய
கோயில்களின் அமைப்பானது வெளியே தெரிந்தது. கருங்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட
சிதைந்துபோன ஒரு பழைய கோயிலை அது வெளிக்காட்டியது.
சுனாமியானது மேலும் சில பண்டைய கற்சிங்கங்கள், யானைகள் , மயில்கள் போன்றவற்றை
வெளிக்காட்டியது. இச்சிற்பங்கள் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர் காலத்தின்போது
சுவர்கள் மற்றும் கோயில்களை அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
மாமல்லபுர சிற்பங்கள்
மாமல்லபுரச் சிற்பங்கள் பல்லவமன்னர்களின் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக
விளங்குகின்றன. இவை கி.பி 7ஆம் நூற்றாண்டில் நரசிம்மவர்மன் காலத்தில்
செதுக்கப்பட்டவையாகும்.
( ஒருவர் தன் கண்களால் கண்ட உருவங்கள் அல்லது கற்பனை உருவங்களை வடிவமைத்துச்
செய்வது சிற்பம் எனப்படும் .வடிவம் முழுவதையும் ( முன்புறம் பின்புறம் இரண்டையும் )
காட்டும் சிற்பங்களை முழுவடிவச் சிற்பங்கள் என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும்
சிற்பங்களை புடைப்புச் சிற்பங்கள் என்றும் வகைப்படுத்துவர்.மனிதனின் படைப்புக்களில்
காலத்தால் அழியாமல் வாழக்கூடிய கலைப் படைப்பு சிற்பமாகும்.)
மாமல்லபுரத்திலுள்ள குடவரைக் கோயில்கள் , ஒற்றைக்கல் இரதங்கள் , மண்டபங்கள் மற்றும்
சிற்பங்கள் ஆகியவை அக்காலத்தைய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்குச் சிறந்த
சான்றாகும்.
குடவரைக் கோயில்கள்
பாறைகளில் குடைந்து செய்யப்பட்ட கோயில்கள் இவையாகும்.அவற்றிலுள்ள சிற்பங்கள்
புராணக்கதைகள் மற்றும் கடவுள்களின் உருவங்களைக் கொண்டுள்ளன.
ஒற்றைக்கல் இரதங்கள்
ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து இரதங்கள் , இவை பாண்டவர் ரதங்கள் என்று
அழைக்கப்படுகின்றன.
மண்டபங்கள்
திறந்தவெளி மண்டபங்களாக உள்ளன.அவற்றில் உள்ள சிற்பங்கள் அக்காலத்தைய சமூக
வாழ்க்கை மற்றும் விலங்கினங்களைக் குறிக்கின்றன.
(படங்கள் – திறந்தவெளி மண்டபங்கள் )
புடைப்புச் சிற்பங்கள்
புடைப்புச் சிற்பம் என்பது பின்னணியில் இருந்து உருவங்கள் புடைத்து இருக்கும்படி
அமைக்கப்படும் ஒரு சிற்ப வகை ஆகும்.இச்சிற்பங்களில் செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள்
பின்னணியோடு ஒட்டியே இருக்கும். இதனால் இச்சிற்பங்களில் ஓரளவு முப்பரிமாணத்தன்மை
காணப்பட்டாலும் உருவங்களின் ஒருபக்கம் மட்டுமே தெரியக்கூடியதாக அமைந்திருக்கும்.
தனித்து நிற்கும் முழு உருவச் சிற்பங்களைப்போல எல்லாப் பக்கங்களையும் பார்க்க முடியாது.
இச்சிற்பங்களில் அர்ஜூனன் தவம் அல்லது கங்கையின் பிறப்பு சிற்பம் மிகவும் பிரபலமானது.
* இக் கலைப்படைப்புகள் அத்தனையையும் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்ட நாம்
அவற்றின் கலைவண்ணம் கண்டு உடல் சிலிர்த்து நின்றோம். கல்லிலே கலை வண்ணம் காட்டிய
எம் மூதாதையரின் திறன் மற்றும் தூரநோக்கு எம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.
(படங்கள் – பார்வையிடும் பங்கேற்பாளர்கள் )
மாமல்லபுரத்தின் சிற்பக்கலை அற்புதங்களைக் கண்டு இரசித்து நின்ற எம் அனைவரதும்
கவனத்தை ஈர்த்தது குன்று ஒன்றின் மேல் இருந்த உருண்டு திரண்ட பாரிய ஒற்றைக் கல் ஒன்று.
அது எந்த நிமிடத்திலும் உருண்டு சென்று விழுந்துவிடக்கூடும் என்ற அச்சத்தை
பார்ப்போரிடையே ஏற்படுத்தினாலும் இன்றுவரை அவ்வாறானதொரு அசம்பாவிதம்
நேர்ந்துவிடாது பல நூற்றாண்டுகளைக் கடந்தும் அக்கல் அவ்விடத்திலேயே அசையாது
குடிகொண்டிருப்பதை அறிந்தபோது வியக்கத்தக்க விந்தைகளில் ஒன்றாகவே அது எமக்குத்
தோன்றியது.
மாமல்லபுரத்தைப் பார்வையிடுவதுடன் எமது பண்பாட்டுப் பயணம் நிறைவுக்கு வருகிறது என்ற
எண்ணம் தோன்றியபோது இன்னும் சில நாட்கள் இப்பயணம் நீடிக்கக்கூடாதா? என எமது
உள்ளங்கள் ஏக்கமுறவே செய்தன. கூடவே இன்னும் பல தடவைகள் தமிழகத்தைத்
தரிசிக்கவேண்டும் என்ற எண்ணமும் இதயத்தில் ஆழமாக வேரூன்றியது.
உடல் சோர்வையும் மீறிய உளச் சோர்வுடன் முதல் தடவையாக தங்குவதற்கு ஒழுங்கு
செய்யப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தோம். எனது அடுத்த பதிவில் அயலகத் தமிழர் தின நிகழ்வுகளைத் தருவதற்கு உள்ளேன். அதுவரை காத்திருப்போமா?