இஸ்ரேலும் ஈரானும் திங்களன்று (23) ‘முழுமையான போர்நிறுத்த’ ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேறிய 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.
எனினும், அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுக்களை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளதுடன் போர்நிறுத்தம் குறித்த எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.
போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முழுமையான போர்நிறுத்தம் ஏற்படும் என்று முழுமையாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது – என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுப்படி, ஈரான் முதல் கட்ட நடவடிக்கையாக போர்நிறுத்தத்தில் ஈடுபடும். தொடர்ந்து இஸ்ரேலும் 12-வது மணிநேரத்தில் போர்நிறுத்தம் மேற்கொள்ளும். அடுத்த 24 மணிநேரத்தில், முற்றிலும் போரானது நிறுத்தப்படும்.
12 நாள் போரானது அதிகாரப்பூர்வ முறையில் உலகம் வணங்கும் வகையிலான ஒரு முடிவுக்கு வரும்.
இந்த போர்நிறுத்த காலகட்டத்தில், இரு நாடுகளும் அமைதியாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இரு தரப்பினரும் புதிய தாக்குதல்களை அச்சுறுத்திய சில நிமிடங்களுக்குப் பின்னர் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய பின்னர் இது வருகிறது.

போர் நிறுத்தத்தை மறுத்த தெஹ்ரான்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே திங்களன்று போர் நிறுத்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க ட்ரம்ப் கூறிய நிலையில், தெஹ்ரான் அந்தக் கூற்றை மறுத்துள்ளது.
அமெரிக்காவிடமிருந்து போர் நிறுத்தம் கோரும் எந்த போர் நிறுத்த முன்மொழிவையும் பெறவில்லை என்றும் அது கூறியுள்ளது.
இதற்கிடையில், போர் நிறுத்தக் கோரிக்கை குறித்து இஸ்ரேல் அமைதியாக உள்ளது மற்றும் அதன் செயல்படுத்தல் குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறியது.
எக்ஸில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி,
தற்போது வரை, போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த “உடன்பாடும்” இல்லை.
எனினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4.00 (செவ்வாய்) மணிக்குள் நிறுத்தினால், எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் – என்றார்.

எண்ணெய் விலை வீழ்ச்சி
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியதால், செவ்வாய்க்கிழமை எண்ணெய் விலைகள் ஒரு வாரத்திற்கும் மேலாக மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தன.
இது அப்பகுதியில் விநியோக இடையூறு குறித்த கவலைகளைத் தணித்தது.
பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 0006 GMT மணியளவில் ஒரு பீப்பாய்க்கு $2.69 அல்லது 3.76% குறைந்து $68.79 ஆக இருந்தது.
ஜூன் 11 க்குப் பின்னர் அதன் விலை சரிந்த சந்தர்ப்பமாகும் இது.
அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் பீப்பாய்க்கு $2.7 அல்லது 3.94% சரிந்து $65.46 ஆக இருந்தது.
இது ஜூன் 09 க்குப் பின்னர் அதன் விலை சரிந்த சந்தர்ப்பமாகும்.
ஈரான் OPEC இன் மூன்றாவது பெரிய மசகு எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது.
மேலும் பதட்டங்களைத் தளர்த்துவது அதிக எண்ணெயை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் மற்றும் விநியோக இடையூறுகளைத் தடுக்கும், இது அண்மைய நாட்களில் எண்ணெய் விலைகள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணியாகும்.

அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் திங்களன்று நடவடிக்கை எடுத்தது.
கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை ஏவியது.
எனினும் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கட்டார் அரசாங்கம் கூறியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
வார இறுதியில் மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகளை ஏவியது.
இந்த நடவடிக்கை குறித்தும் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,
இந்த தாக்குதல் பலவீனமானது மற்றும் எதிர்பார்க்கப்பட்டது என்று அழைத்தார்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் “அழிக்கப்பட்டதை” தொடர்ந்து ஈரான் 14 ஏவுகணைகளை ஏவியதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.
அவற்றில் 13 இடைமறிக்கப்பட்டன என்றார்.



















