மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அமைந்துள்ள ஒரு சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று இந்தியர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.
மேற்கு மாலியின் ஒரு பகுதியான கெய்ஸில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலை மீது ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
துப்பாக்கிதாரிகள் குறித்த ஆலைக்குள் நுழைந்து, தாக்குதலின் போது தொழிலாளர்களை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக மாலி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலி முழுவதும் பல தாக்குதல்களை நடத்திய அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் (JNIM) இந்த கடத்தலுக்கும் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலை இந்திய வெளிவிவகார அமைச்சு கண்டித்துள்ளதுடன், தொழிலாளர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் விடுதலை செய்ய தலையிடுமாறு மாலி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.


















