டெல்லியில் அமைந்துள்ள 05 பாடசாலைகளுக்கு இன்று (16) வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, துவாரகாவில் உள்ள செயிண்ட் தொமஸ் பாடசாலை, வசந்த் குஞ்சில் உள்ள வசந்த் பள்ளத்தாக்கு பாடசாலை, ஹவுஸ் காஸில் உள்ள மதர்ஸ் சர்வதேச பாடாசலை, பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பாடசாலை மற்றும் லோடி எஸ்டேட்டில் உள்ள சர்தார் படேல் வித்யாலயாம் ஆகிய பாடசாலைகளுக்கு வெடி குண்டு அச்சுறுத்தல்கள் வந்ததாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
துவாரகா பாடசாலைக்கு இன்று காலை 5.26 மணிக்கும், வசந்த் குஞ்ச் பாடசாலைக்கு காலை 6.30 மணிக்கும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.
இதையடுத்து டெல்லி பொலிஸார், வெடிகுண்டு செயலிழப்பு படை, நாய் படை மற்றும் சைபர் நிபுணர்கள் குழுக்கள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு விரைந்து சென்று முழுமையான ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தனர்.
ஆய்வுகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
இரண்டு நாட்களில் செயிண்ட் தொமஸ் பாடசாலைக்கு வெடி குண்டு அச்சுறுத்தல் வருவது இது இரண்டாவது முறையாகும்.
நேற்றும் குறித்த பாடசாலைக்கு இதேபோன்ற அச்சுறுத்தல் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைகளைத் தவிர, டெல்லி பல்கலைக்கழகத்தின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கும் நேற்று வெடிகுண்டு அச்சுறுத்தல் கடிதம் வந்தது.
தேசிய தலைநகரில் மொத்தம், மூன்று நாட்களில் சுமார் 10 பாடசாலைகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த மிரட்டல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














