இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பனர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் உபகரண பற்றாக்குறை தொடர்பாக கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரதுறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் இவ்வருடத்திற்குள் நிவர்த்தி செய்யப்படுமெனத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள போதானா வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் தான் உள்ளது. மத்திய அரசின் கீழ் மட்டக்களப்பிலுள்ள ஒரே வைத்தியசாலையும் அதுதான் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்தும் நகர சபையின் கீழ் தான் உள்ளது.
அதனை மத்திய அரசின் கொண்டுவருவதற்கான எந்தவொரு திட்டமும் எங்களுக்கு இல்லை, இருந்தும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நாட்டிலுள்ள மாவட்ட வைத்தியசாலைகள் மத்திய அரசின் வருமானால் எங்களால் அதனை இன்னும் தரமாக செயற்படுத்த முடியும் என நாங்கள் நினைக்கின்றோம்.
அதுவும் நகர சபை அனுமதி வழங்கினால் மட்டுமே அதனை எங்களால் செய்ய முடியும் இல்லையென்றால் அது குறித்த நகர சபையின் கீழ் தான் செயற்படும். அடுத்ததாக MRI இயந்திரம் நிச்சயமாக இவ்வருட இறுதிக்குள் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெறும்.
நான் கடந்த காலத்தை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை எங்களுடைய அரசாங்க்ததில் தேவையான விடயங்கள் தேவையான வைத்தியசாலைகளுக்கு கிடைக்கப்பெறும்.
நிச்சயமான மேற்குறித்த உபகரணங்களும் விரைவில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்படும்” என சுகாதாரதுறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி அளித்துள்ளார்.














