இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன.
நேற்றைய அகழ்வின் போது புதிதாக மேலும் 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய செம்மணி புதைகுழி வளாகத்தில் இருந்து இதுவரை 72 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.
இந்நிலையில் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி அகழ்வாய்வுத்தளத்தில் வழக்கு விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அகழ்வு நடைபெறும் இடத்தில் பிரச்சன்னமாகி இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் இதுவரை யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, இந்த விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் ஒப்படைக்கபட்டுள்ளது.
இந்நிலையிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அகழ்வு இடம்பெறும் இடத்தில் பிரச்சன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.














