ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கி சென்ற பயணிகள் விமானத்தில் 5 குழந்தைகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை அண்மித்த போது , அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதுடன் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதாக விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப்பத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து குறித்த விமானம் விபத்துக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதுடன் அன்டோனோவ் An-24 பயணிகள் விமானத்தில் இருந்த 49 பேரும் உயிரிழந்ததாக அவசரகால அதிகாரிகளை மேற்கோள் காட்டி அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு முன்பு ஒரு துயர சமிக்ஞையை வெளியிடவில்லை அல்லது எந்த தொழில்நுட்ப சிக்கல்களையும் தெரிவிக்கவில்லை என்று அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்தவிமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















