16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையில் யூடியூப்பையும் சேர்ப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பதின்ம வயதுடையோரை ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ஒரு முக்கிய சமூக ஊடகச் சட்டத்தின் வரம்பை அவுஸ்திரேலியா விரிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தடையின் கீழ் பதின்ம வயதுடையோர் இன்னும் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க முடியும்.
ஆனால், உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதற்கோ அல்லது தளத்தில் தொடர்புகொள்வதற்கோ தேவைப்படும் கணக்கை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
புதிய தடை எவ்வாறு செயல்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்கள் கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆல்பாபெட்டுக்குச் சொந்தமான வீடியோ பகிர்வு தளம் ஆசிரியர்களிடையே பிரபலமாக இருப்பதால் முன்னதாக அதற்கு தடை உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














