சிலாபம், பங்கதெனியா, வீரகமண்டலுவ பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து சிலாபம், பங்கதெனியா, வீரகமண்டலுவ பகுதியில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில், கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கை நேற்று (29) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் அந்த வீட்டில் இருந்து தப்பிச் சென்றதாகவும்
அவர் முச்சக்கர வண்டியில் சிலாபம் பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூன்று பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிலாபம் தலைமையகப் பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.















