இஸ்ரேல் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், காசாவில் வைத்திருக்கும் பணயக்கைதிகளுக்கு உதவி வழங்க செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ஹமாஸ் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது.
2023 அக்டோபர் 7 முதல் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதி எவியதார் டேவிட்டின் இரண்டு காணொளிக்களை வெளியிட்டதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஹமாஸ் குழுவின் இந்த அறிக்கை வந்துள்ளது.
காணொளியில் தற்போது 24 வயதான பணயக்கைதி எலும்புக்கூடு போல் தோற்றமளிக்கிறார்.
அவரது தோள்பட்டையில் காயத்தின் தழும்புகள் காணப்படுகின்றன.
இந்த காட்சிகள் பெரும் விமர்சனத்தைத் தூண்டின, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் இந்த காணொளிகள் “பயங்கரமானவை” என்று முத்திரை குத்தினார்.
மேலும் அவை “ஹமாஸின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்துகின்றன” என்று கூறினார்.
இதனிடையே ஞாயிற்றுக்கிழாமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பணயக்கைதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியுள்ளார்.
இந் நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள ஹமாஸின் இராணுவ செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்தா,
எதிரி கைதிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தின் எந்தவொரு கோரிக்கைக்கும் நேர்மறையாக ஈடுபடவும் பதிலளிக்கவும் தயாராக உள்ளோம்.
ஆனால், இஸ்ரேல் நிரந்தரமாக ஒரு மனிதாபிமான வழித்தடத்தைத் திறப்பது, உதவி விநியோகிக்கப்படும்போது வான்வழித் தாக்குதல்களை நிறுத்துவது உள்ளிட்ட சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் ஆறு பேர் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து இந்த எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 93 சிறுவர்களும் அடங்குவர்.
பல சர்வதேச நிறுவனங்கள் பிரதேசம் முழுவதும் பஞ்சம் பரவி வருவதாக எச்சரித்துள்ளன.
இஸ்ரேலிய முற்றுகை காரணமாக கடந்த மார்ச் 2 முதல் மே 19 வரை காசாவிற்குள் எந்த உதவியும் வரவில்லை – அன்றிலிருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவது குறைவாகவே உள்ளது.
இதற்கிடையில், பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் நேற்று காசாவில் குறைந்தது 80 பேர் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களால் இறந்ததாகவும் கூறினர்.















