மியன்மார் இராணுவத்தின் பேரழிவு தரும் குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாகவும், பல குழந்தைகள் உட்பட குறைந்தது 80 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மத்திய மியன்மார் நகரத்தில் பௌத்த விழாவின் போது ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ எதிர்ப்பு போராட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, திங்கட்கிழமை (06) மாலை மத்திய நகரமான சாங்-யுவில் இந்தத் தாக்குதல் நடந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் வெளியிட விரும்பாத ஏற்பாட்டுக் குழுவின் பெண் உறுப்பினர் ஒருவர், விழாவிற்காக சாங்-யுவில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்ததாகவும், பங்கேற்பாளர்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடத் தொடங்கியபோது, ஆயுதப்படைகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது குண்டுகளை வீசியதாகவும் கூறினார்.
இராணுவ ஆட்சிக்குழுவின் தாக்குதலில் 40 பேர் இறந்ததை உள்ளூர் மியன்மார் ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
எனினும், செவ்வாய்க்கிழமை இரவு வரை மியன்மாரின் ஆட்சிக்குழு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் யாரும் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்று AFP செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.














