இராணுவத் தாக்குதலில் இருந்து தன்னையும் வெளிநாட்டுப் பகுதிகளையும் பாதுகாத்துக் கொள்ளும் திட்டம் இங்கிலாந்துக்கு இல்லை என்று நாட்டின் நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் நேரத்தில், தன்னையும் நட்பு நாடுகளையும் பாதுகாத்துக் கொள்ளும் திறன் இங்கிலாந்துக்கு இல்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.
நேட்டோவின் கடமைகளை நிறைவேற்றுவதில் இங்கிலாந்து தோல்வியடைந்து வருவதாகவும், அதன் தலைமைத்துவ நிலையை அடைய மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாகவும் அறிக்கை கண்டறிந்துள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிக்கும் ஒரு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ஆறு புதிய ஆயுத தொழிற்சாலைகளின் நிர்மாணத்துக்கு சாத்தியமான இடங்களை இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சு அடையாளம் கண்டுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜோன் ஹீலி, இங்கிலாந்தை போர் தயார்நிலைக்கு மாற்றும் திட்டங்களை அறிவித்தார்.
இதில் தனியார் ஒப்பந்தக்காரர்களால் நிர்மாணிக்கப்படும் புதிய ஆயுத தொழிற்சாலைகளின் கட்டுமானத்துக்கான 1.5 பில்லியன் பவுண்ட்ஸ் நிதியும் அடங்கும்.
இந்த நிலையில், 11 மாத மதிப்பீட்டுகளுக்குப் பின்னர் மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு, இராணுவத் தாக்குதலை எதிர்கொள்ள இங்கிலாந்து மற்றும் அதன் ஐரோப்பிய நேட்டோ நட்பு நாடுகள் அமெரிக்காவை அதிகமாக நம்பியிருப்பதாகவும், அதன் சொந்த பாதுகாப்புக்காக போதுமான நிதியை செலவிடவில்லை என்றும் எச்சரித்துள்ளது.














