கம்போடியாவில் பயணிகள் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 16 பயணிகள் உயிரிழந்ததுடன், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புகழ்பெற்ற அங்கோர் வாட் ஆலய வளாகத்தின் தாயகமான சீம் ரீப்பில் இருந்து தலைநகர் புனோம் பென்னுக்குப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, வியாழக்கிழமை (20) அதிகாலை மத்திய மாகாணமான கம்போங் தோமில் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணியாளர்கள் வியாழக்கிழமை இரவு தேடுதலை முடித்த பின்னர், வெள்ளிக்கிழமை இறப்பு எண்ணிக்கை 13 லிருந்து 16 ஆக உயர்ந்ததாகவும் அவர்கள் உறுதிபடுத்தினர்.
வழக்கமாக ஐந்தரை மணி நேர பயணத்திற்காக சீம் ரீப்பில் இருந்து இரவில் பேருந்து புறப்பட்ட பின்னர் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தின் போது, பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் கம்போடியர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

















