தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்த வங்காள விரிகுடா உருவாகியுள்ள தாழமுக்கம், மேல் – வடமேல் திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் அதிகரித்தள்ள மழையுடனான காலநிலை காரணமாக 10 மாவட்டங்களில், 504
குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அனர்தங்களில் சிக்கி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 193 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளில் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை அதிகளவான மழைவீழ்ச்சி காரணமாக, மகா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஜின் கங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீரியல்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.















