தென்கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (28) குறைந்தது 129 ஆக உயர்ந்தது.
இப்பகுதியில் அதிகாரிகள் சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீட்பதற்கும், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகளை மீட்டெடுப்பதற்கும், மீட்பு முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும் பணியாற்றி வருகின்றனர்.
இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்தின் பெரும்பகுதிகள் ஒரு வாரமாக சூறாவளியால் தூண்டப்பட்ட அடைமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் சுமத்ராவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 72 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாட்டின் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.
நாட்டின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை சீரமைக்கவும், மண்சரிவு இடிபாடுகளால் தடைபட்ட வீதிகளை சுத்தம் செய்யவும் அதிகாரிகள் பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.
தாய்லாந்தின் தெற்கு மாகாணமான சோங்க்லாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குறைந்தது 55 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோங்க்லாவில் உள்ள ஹாட் யாய் நகரில், வெள்ளிக்கிழமை மழை இறுதியாக நின்றுவிட்டது, ஆனால் வெள்ளம் இன்னும் சூழ்ந்துள்ளது.
அதேநேரம், மலேசியாவில், இரண்டு பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், வெப்பமண்டல புயல் சென்யார் நள்ளிரவில் கரையைக் கடந்தது, அதன் பின்னர் பலவீனமடைந்துள்ளது.
வானிலை அதிகாரிகள் இன்னும் பலத்த மழை மற்றும் காற்றினை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
மேலும் கடல் கொந்தளிப்பானது சிறிய படகுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்தனர்.
வியாழக்கிழமை நிலவரப்படி, 34,000 க்கும் மேற்பட்டோர் பாதிகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் சிக்கித் தவிக்கும் 1,459 மலேசிய நாட்டினரை ஏற்கனவே வெளியேற்றிவிட்டதாக மலேசியாவின் வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் வெள்ள மண்டலங்களில் சிக்கித் தவிக்கும் மீதமுள்ள 300 பேரை மீட்கும் பணியில் ஈடுபடுவதாகவும் கூறினார்.














