நாட்டில் தற்போது நிலவும் திடீர் அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக, இன்று முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்குப் பொதுமக்களுக்குச் சுகாதார வசதிகளைத் தடையின்றி வழங்குவதற்காகச் சுகாதாரத் துறை தொடர்பான அவசர நிலையைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன்படி, ‘டிட்வா’ புயல் காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவின் கையொப்பத்துடன் விசேட சுற்றுநிருபம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களும் மற்றும் நிறுவனத் தலைவர்களும் நோயாளர் பராமரிப்புச் சேவைகள் 24 மணி நேரமும் தடையின்றிச் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் வைத்தியசாலைப் பணியாளர்களைச் சேவைக்கு அழைப்பதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது













