அண்மைய பாதகமான வானிலைக்குப் பின்னர், இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க 1.8 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர்,
இன்று (நேற்று) இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 1.8 மில்லியன் யூரோக்களை நிதியாக வழங்கியதற்காக, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் கார்மென் மொரேனோ மற்றும் இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் (ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா) தூதர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்கொடையின் ஒரு பகுதி, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் பேரிடர் மீட்பு அவசர நிதியின் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படும்.
ஐரோப்பிய குடிமைப் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கை (ECHO) மூலம் ஐரோப்பிய ஒன்றியமும் முக்கிய உதவிகளை வழங்கி வருகிறது.
மேலதிகமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு சேதத்தை மதிப்பிடுவதிலும் எதிர்கால இடர் பகுப்பாய்வை ஆதரிப்பதிலும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐரோப்பிய ஒன்றியம் பொருள் உதவி மற்றும் நிபுணர்களை வழங்குகிறது.
இந்த சவாலான காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை மற்றும் சரியான நேரத்தில் ஆதரவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக எங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அர்ப்பணிப்பு இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீடித்த நட்பையும் வலுவான கூட்டாண்மையையும் பிரதிபலிக்கிறது – என்றுக் கூறியுள்ளார்.















