அபாயகரமான மாத்தளை பிரதேசங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமையினால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாத்தளை மாவட்டப் பிரிவின் தலைமை புவியியலாளர் சமிந்த மொரேமட தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை பிரதேச சபைக்குட்பட்ட சுற்றுலாத்தலமாக பிரசித்திப்பெற்ற செம்புகவத்தை தோட்டைத்தைச் சேர்ந்த 90 குடும்பங்களைச் சேர்ந்த 350ற்கும் மேற்பட்ட மக்கள் செம்புகவத்தை பழமையான மூடப்பட்டிருந்த தேயிலைத் தொழிற்சாலையில் தங்கியிருக்கின்றனர்.
இம்மக்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் இத்தொழிற்சாலையில் தங்கியுள்ளதாகவும், செம்புகவத்தை பாலம் மற்றும் பாதைகள் சேதமடைந்துள்ளமையினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு, தமது வாழ்வாதாரத்தினை தேடி மக்கள் செல்லமுடியாதுள்ளதாகவும் நோயாளிகளை மருத்துவத்திற்கு கொண்டு செல்வதற்கும் சிரமப்படுவதாகவும் இம்மக்கள் விசனம் தெரிவித்தனர்.
















