நைஜீரியா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் வடமேற்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா ஒரு தாக்குதலை நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், அமெரிக்க இராணுவமும் வியாழக்கிழமை (25) தெரிவித்தது.
பயங்கரவாதக் குழு குறித்த பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களை குறிவைத்து தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நைஜீரியா அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை வந்துள்ளது.
தாக்குதல் தொடர்பில் சமூக ஊடகத்தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,
இன்றிரவு (நேற்றிரவு) தளபதியாக எனது வழிகாட்டுதலின் பேரில், வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குப்பைகளுக்கு எதிராக அமெரிக்கா ஒரு சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலைத் தொடங்கியது.
அவர்கள் பல ஆண்டுகளாக, ஏன் பல நூற்றாண்டுகளாகக்கூட காணப்படாத அளவில் அப்பாவி கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொடூரமாகக் கொன்று வருகின்றனர் – என்றார்.
இதேவேளை, நைஜீரிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சொகோட்டோ ( Sokoto) மாநிலத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பல ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க இராணுவத்தின் ஆப்பிரிக்க கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
நைஜீரிய அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக எக்ஸில் கட்டளைப் பிரிவு வெளியிட்ட முந்தைய அறிக்கையில் கூறப்பட்டது, ஆனால் அந்த அறிக்கை பின்னர் நீக்கப்பட்டது.
இதனிடையே, அமெரிக்காவுடனான தொடர்ச்சியான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நைஜீரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் புலனாய்வுப் பகிர்வு மற்றும் போராளிக் குழுக்களை குறிவைப்பதற்கான மூலோபாய ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும்.
போகோ ஹராம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் ஜிஹாதி குழுக்கள் போன்றன வடகிழக்கு நைஜீரியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பேரழிவை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வருகின்றன – தாக்குதலில் பாதிக்கப்படும் மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்று உலகம் முழுவதும் அரசியல் வன்முறையை பகுப்பாய்வு செய்யும் ஒரு குழுவான ஆக்லெட் கூறுகிறது.














