யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 169 மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்யப்படாமல் கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான கேள்வியின் போது பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இடம் பெற்றுவரும் நிலையில் நீதிமன்ற வழக்கு இடம்பெறுகின்ற காரணத்தினால் வழக்கு நிறைவடையாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் குறித்த நிதியை கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பில் கட்டுவதற்குரிய உத்தரவு கிடைக்குமாயின் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் அல்லாவிட்டால் மாற்றுக்காணி ஒன்றை தேர்வு செய்து உள்ள விளையாட்டு அரங்கினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.















