பறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து ட்ரோன் விமானங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் இதில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவை முறையாக வானில் பறக்கவிடப்படுவதற்கான ஒழுங்குவிதிகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டிலிருந்து அவற்றை அமுல்படுத்தத் தீர்மானித்துளளதாகவும் 250 கிராமிற்கும் குறைவான எடையுடைய ‘விளையாட்டுப் பொருள்’ (Toy) வகையைச் சேர்ந்த ட்ரோன்களை நாம் ஒழுங்குபடுத்தப் போவதில்லை எனவும் ஆனால், 250 கிராமிற்கு மேற்பட்ட அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை நாம் கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவற்றை இறக்குமதி செய்வதற்கும் தனியான ஒழுங்குவிதிகள் காணப்படுகின்ற நிலையில் அதற்கமையச் ட்ரான் பயன்பாட்டாளர்கள் செயற்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.












