உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடனும், கௌரவத்துடனும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, ‘சர்வஜன அதிகாரம்’ கட்சித் தலைவர் திலித் ஜயவீர தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
விவசாய வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட இத்திருநாளில், வளமான அறுவடைக்குத் துணைநின்ற பூமி, சூரியன் மற்றும் மழை போன்ற இயற்கை சக்திகளுக்கும், விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துவது இப்பண்டிகையின் பிரதான நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்கால சமூகச் சூழலில் நன்றியுணர்வு மற்றும் கடினமான காலங்களில் தமக்கு உதவியவர்களை நினைவில் வைத்திருத்தல் போன்ற உன்னத விழுமியங்கள் படிப்படியாக மங்கி வருவதாகத் தனது செய்தியில் திலித் ஜயவீர கவலை வெளியிட்டுள்ளார்.
“இக்கட்டான தருணங்களில் கைகொடுத்தவர்களை மறக்காத பண்பு மனித சமூகத்திற்கு மிக முக்கியமானது. அத்தகைய உன்னத விழுமியங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் தைப்பொங்கல் பண்டிகை நமக்கு அடையாளப்படுத்துகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சமூகத்தில் மீண்டும் நன்றியுணர்வு மேலோங்க இத்திருநாள் அமையட்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.












