ரஷ்யா மீது பிரித்தானிய அரசால் விதிக்கப்பட்ட தடைகளை மீறி பல்வேறு Shadow Fleet எண்ணெய் கப்பல்கள் இந்த மாதம் ஆங்கிலக் கால்வாயில் பயணித்துள்ளன.
பிரித்தானிய அரசு “கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்திருந்தாலும் தடை விதிக்கப்பட்ட 42 கப்பல்கள் கால்வாயை கடந்ததாக தகவல்வெளியாகியுள்ளது.
Sofos எனும் எண்ணெய் கப்பல், 2025 மே மாதம் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தால் தடை விதிக்கப்பட்டது.
இது வெனிசுலாவிலிருந்து பயணித்து தற்போது ரஷ்யாவின் St. Petersburg அருகே உள்ளது.
அதேபோல், Nasledie எனும் 20 ஆண்டுகள் பழமையான எண்ணெய் கப்பல், பெயர் மாற்றம் செய்து, போலியான கொடியுடன் சுமார் 100,000 தொன் கச்சா எண்ணையை ஏற்றிச் சென்றுள்ளது.
இந்த Shadow Fleet எண்ணெய் கப்பல்கள், தடைகளை தவிர்க்க சிக்னல் அணைத்தல், போலியான பதிவு, தவறான இடம் காட்டுதல் போன்ற முறைகளைப் பயன்படுத்துகின்றன.
கடல்சார் புலனாய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள், “இவை ரஷ்யாவின் பொருளாதார உயிர்நாடியாக செயல்படுகின்றன” எனக் கூறியுள்ளனர்.
பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் (Yvette Cooper ) ய்வேட் கூப்பர், “ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையை முறியடிக்க புதிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.
ஆனால், இதுவரை பிரித்தானியா தனிப்பட்ட முறையில் எந்த கப்பலையும் கைப்பற்றவில்லை.
பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் சில எண்ணெய் கப்பல்களை கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், “தடைகள் காகிதத்தில் மட்டுமே இருக்கக் கூடாது, நடைமுறையில் அமுல்படுத்தப்பட வேண்டும்” என விமர்சித்துள்ளனர்.















