பயங்கரவாதத்திலிருந்து – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?
கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணம்,தந்தை செல்வா கலையரங்கில், ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர இருக்கும் பின்னணியில் அந்த சட்டமூலத்தின் வரைவை குறித்த ஒரு கலந்துரையாடலாக அது அமைந்திருந்தது.
சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலையத்தின் பணிப்பாளர்,குருபரன்,”பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்” புதிய சட்ட வரைபை அதன் ஒவ்வொரு பகுதியாக விரிவாக எடுத்துக் கூறினார்.அதன்பின் அது தொடர்பாக அங்கு வந்திருந்தவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.அரசாங்கம் புதிய சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிக்கும் பின்னணியில், அது தொடர்பான குடிமக்கள் சமூகங்களின் கருத்தை கேட்டு தொகுத்து அனுப்புவதும் அக்கருத்தரங்கின் நோக்கங்களில் ஒன்று என்று கூறப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்றுதான் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக கூறி வருகிறார்கள்; போராடி வருகிறார்கள்.அதற்கு பதிலாக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருமாறு கேட்கவில்லை.இன்று இக்கட்டுரையானது புதிய சட்ட வரைபில் உள்ளடக்கப்பட்ட சட்ட ரீதியிலான ஏற்பாடுகளை ஆராயப்போவதில்லை.மாறாக,இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால்,ஒரு புதிய சட்டம் ஏன் அரசாங்கத்துக்குத் தேவையாக இருக்கிறது? அதிலும் குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஏன் தேவையாக இருக்கிறது? என்பதைச் சற்று ஆழமாகப் பார்ப்பதுதான்.
சட்டம் என்பது தேவ சபையில் நிறைவேற்றப்படும் புனிதமான ஆவணம் அல்ல. அதை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள்.யார் அந்த மனிதர்கள் என்றால்,ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்கள்தான்.இதை இன்னும் நடைமுறை வார்த்தைகளில் சொன்னால், அந்த நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகிறார்கள். எனவே அரசாங்கத்தின் கொள்கை எதுவோ அதுதான் சட்டமாக நிறைவேற்றப்படும்.அரசு நிரந்தரமானது.அரசாங்கம் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை தெரிவு செய்யப்படுவது.இதில் அரசுக் கொள்கையை மீறி அரசாங்கம் போக முடியாது.எனவே அரசின் கொள்கை எதுவோ அதை அரசாங்கம் தன்னுடைய புதிய நிலைமைகளுக்கு ஏற்ப சட்டமாக நிறைவேற்றுகின்றது.அல்லது ஏற்கனவே இருக்கும் சட்டங்களைத் திருத்துகின்றது.
இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பு எனப்படுவது சிங்கள பௌத்த உணர்வுகளை அதிகம் பாதுகாக்கும் ஒரு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்பது உலகம் முழுவதற்கும் தெரியும்.அந்த சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் கொள்கைகள் எவையோ அவைதான் சட்டமாக்கப்படும். இந்த அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தின் பின்னால் உள்ள அரசாங்கத்தின் உளவியலை விளங்கிக் கொள்ள வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டம் கடந்த பல தசாப்தங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்கும் அரச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான் பயங்கரவாத தடைச் சட்டம் உருவாக்கப்பட்டது.தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்திரித்து அதனை ஓடுக்குவதற்கு உரிய ஏற்பாடுகள் அங்கே உண்டு.எனினும் பின்னர் அது சிங்கள,முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பிரயோகிக்கப்பட்டது.ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின்போது,ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தன,தமிழ் ஆயுதப் போராளிகளை “பயங்கரவாதிகள்”என்று அழைத்தார்.ஆனால் ஜேவிபியினரை “நாசகார சக்திகள்”என்று அழைத்தார். வார்த்தைகளுக்குள்ளும் நுட்பமாக இன முரண்பாடு?
கடந்த முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வெவ்வேறு வடிவங்களில் போராடி வந்திருக்கிறார்கள்.போராடி வருகிறார்கள்.தொடக்கத்தில் கடந்த நூற்றாண்டில் தமிழ் மக்கள் சத்யாக்கிரக வழியில் போராடினார்கள்.ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் அதனை அரச வன்முறைகளின் மூலம் தோற்கடித்தது.அறவழிப் போராட்டத்தை தமிழ் தலைவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் முன்னெடுக்கவில்லை.ஆனால் மேற்படி தலைவர்களால் உருவேற்றப்பட்ட தமிழ் இளையவர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். அதுவும் பின்னர் 2009இல் தோற்கடிக்கப்பட்டது.இப்பொழுது கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் அறவழியில் போராடி வருகிறார்கள்.
தமிழ் மக்கள் அறவழியில் போராடியபோது அதை சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு தன் போலீசார் மற்றும் படையினரின் மூலம் நசுக்கியது.அவசர காலச் சடடத்தைக் கையில் எடுத்து.பின்னர் ஆயுதம் போராட்டம் தொடங்கிய பொழுது அதனை நசுக்குவதற்கு சட்டரீதியாக பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்தது.பயங்கரவாத தடை சட்டத்தைக் குறித்த விமர்சன பூர்வமான கட்டுரைகளை தொகுத்து “மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் (CHRD)” 2009ஆம் ஆண்டு ஒரு நூலை வெளியிட்டது. இந்நூலின் அறிமுக உரையில்,பேராசிரியர்.ஜெயதேவ் உயாங்கொட பின்வருமாறு கூறுகிறார்….
“இலங்கையின் காலனித்துவத்திற்குப் பிந்தைய அரசியல் வரலாறு ஒரு தனித்துவமான பரிமாணத்தைக் கொண்டுள்ளது.1971 முதல் பெரும்பாலான ஆண்டுகளில் நாடு ஏதேனும் ஒரு வகையான விதிவிலக்குச் சட்டதின் கீழ் – அவசரகாலச் சட்டம் அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ்- ஆளப்பட்டுள்ளது. 1971மார்ச்சில் அவசர நிலை அமலுக்கு வந்தது. அது 1976 வரை தொடர்ந்தது. ஒரு குறுகிய கால இடைவெளிக்குப் பிறகு, 1978 இல் அவசரநிலை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.அடுத்த ஆண்டு PTA அறிமுகப்படுத்தப்பட்டது.அடுத்தடுத்த ஆண்டுகளில்,இலங்கை மக்கள் அவசரகாலச் சட்டம் அல்லது PTA இல்லாமல், அவ்வப்போது,மிகக்குறுகிய காலத்திற்கு மட்டுமே சாதாரண சட்டத்தின் கீழ் வாழ வாய்ப்புக் கிடைத்தது,இவ்வாறு,சாதாரண சட்டம் விதிவிலக்காக இருந்து வருகிறது. இந்தக் கதையை சற்று நாடகத்தனமான மொழியில் மீண்டும் கூறினால், 1971 முதல். இலங்கையில் அவசரகாலச் சட்டம் ‘சாதாரண’ சட்டமாக இருந்துவருகிறது. மேலும் சாதாரண சட்டமானது,’அவசரகாலச் சட்டத்தின்’நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது”.
இது எதைக் காட்டுகிறது? சாதாரண சட்டங்களின் மூலம் இந்த நாட்டை ஆள முடியாத ஓர் அரசியல் சூழல் தொடர்ந்து நிலவிவருகிறது என்பதைத்தான்.அசாதாரண சட்டங்களே சாதாரண சட்டங்களைப்போல தொடர்ச்சியாக பிரயோகிக்கப்படுவது,இந்த நாட்டின் சட்டச் சூழலை, ஜனநாயகச் சூழலை கேள்விக்கு உள்ளாக்குவது.
குறிப்பாக 2009இல் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று கூறிக்கொள்ளும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது, தொடர்ந்து எதற்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற ஒரு சட்டத்தை தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் தலைக்கு மேல் தொங்க விடுவதன் மூலம், அவர்களைத் தொடர்ந்தும் ஒரு கட்டத்துக்கு மேல் போராட விடாமல் தடுக்கலாம்.தமிழ் மக்களின் அரசியல் எதிர்ப்பை பயங்கரவாதமாக சித்தரிக்கக் கூடிய சட்ட வாய்ப்புகளை அது எப்பொழுதும் பேணும். எனவே இங்குள்ள அரசியல்,இராணுவ நோக்கம் எதுவென்றால்,தமிழ் மக்களை போராட முடியாத மக்களாகத் தொடர்ந்து பேணுவதுதான்.
தமிழ் மக்களைப் போராடாமல் வைத்திருப்பதற்கு காலத்துக்கு காலம் பொருத்தமான சட்டங்களை அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பதற்கு இங்கு மற்றொரு உதாரணத்தை சுட்டிக்காட்ட வேண்டும். கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில்,அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிய தமிழ்ச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
காலத்துக்கு காலம் அவர்களுக்கு தமிழ் மக்களை அச்சுறுத்த, போராட விடாமல் தடுக்க ஏதாவது ஒரு சட்டம் தேவை.பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக பேணப்பட்டு வரும் இந்த அரசியல் பாரம்பரியத்தில் அனுரவும் மாற்றங்களை செய்யத் தயார் இல்லை என்பதைதான் புதிய சட்ட வரைபு காட்டுகின்றது.
கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு முன்பு மாற்றத்தை வாக்களித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமானது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விடயத்தில் அதாவது தமிழ் மக்களை ஒடுக்கும் சட்ட ஏற்பாடுகளின் விடயத்தில் திருப்பகரமான மாற்றம் எதையும் செய்யத் தயாரில்லை என்பதைத்தான் புதிய சட்ட வரைபு காட்டுகின்றது.
இத்தனைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடித்தளமாக இருப்பது ஜேவிபி.அதுவும் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கம்.இரண்டு தடவைகள் கொடூரமான விதங்களில் நசுக்கப்பட்ட ஓர் இயக்கம்.75 ஆயிரத்திற்கும் குறையாத அதன் தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.மிகக் கொடூரமான,மனித குலத்தை அவமானப்படுத்தும் சித்திரவதைகளின் மூலம் அவர்கள் விசாரிக்கப்பட்டு,கொல்லப்பட்டார்கள்.எனவே பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சட்டங்களின் ருசி எத்தகையது என்பது ஜேவிபிக்கு நன்கு விளங்கும்.
அதுமட்டுமல்ல,சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஜேவிபி எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக தமிழரசு கட்சி முன்னெடுத்த போராட்டங்களில் ஜேவிபியும் பங்குபற்றியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள்.ஆனால் ஆளுங்கட்சியாக வந்ததும் அவர்கள் தங்களுடைய முன்னைய வாக்குறுதிகள் அனைத்தையுமே கைவிட்டு விட்டார்களா?
இந்த அரசாங்கம் அரகலய போராட்டத்தின் விளைவு.அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகள் அண்மையில் ஒன்று கூடி பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.ஆனால் அந்தப் போராட்டத்தின் கனிகளை தேர்தல் வெற்றியாக மாற்றிய தேசிய மக்கள் சக்தியானது,புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றது.
மாற்றம் என்பது,ஜனாதிபதி அரைக்கால் சட்டையோடு யாழ்ப்பாணத்தின் தெரு ஒன்றில் உடற்பயிற்சி செய்வதோ,அல்லது தமிழ் மக்களோடு செல்பி எடுப்பதோ அல்ல.மாறாக தமிழ் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தலின் கீழ் வைத்திருக்கும் விடயங்களில் நிர்ணயகரமாக அரசியல் தீர்மானங்களை எடுப்பதுதான்.












