அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், மரக்கட்டைகள் மற்றும் மருந்துகள் தொடர்பான தென் கொரிய பொருட்கள் மீதான வரிகளை 25% ஆக அதிகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (26) தெரிவித்தார்.
அதே நேரத்தில் வொஷிங்டனுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இயற்றத் தவறியதற்காக நட்பு நாடான தென் கொரியாவின் சட்டமன்றத்தையும் அவர் விமர்சித்தார்.
இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட ட்ரம்ப்,
கொரிய சட்டமன்றம் எங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எட்டவில்லை.
எனவே இதனால் நான் தென் கொரிய வாகனங்கள், மரங்கள், மருந்து மற்றும் பிற அனைத்து பரஸ்பர வரிகளையும் 15% இலிருந்து 25% ஆக உயர்த்துகிறேன் – என்று பதிவிட்டுள்ளார்.
கட்டண உயர்வு எப்போது அமுலுக்கு வரும், அல்லது ட்ரம்பின் உத்தரவை குறிப்பாகத் தூண்டியது எந்த விடயம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
ட்ரம்பின் அறிவிப்புடன் தென் கொரியாவின் முக்கிய KOSPI குறியீடு (.KS11), செவ்வாய்க்கிழமை (27) ஆரம்ப வர்த்தகத்தில் 0.7% சரிந்தது.
அதே நேரத்தில் திங்களன்று கிட்டத்தட்ட ஒரு மாத உச்சத்தை எட்டிய பின்னர் டொலருக்கு எதிராக தென்கொரிய நாணயமான வோன் 0.5% பலவீனமடைந்தது.
தென் கொரியாவின் ஜனாதிபதி அலுவலகமான ப்ளூ ஹவுஸ் செவ்வாயன்று, கனடாவில் தற்போது இருக்கும் தொழில்துறை அமைச்சர் கிம் ஜங்-க்வான் விரைவில் அமெரிக்காவிற்குச் சென்று வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்-ஐ சந்திப்பார் என்று கூறியது.
ஜனவரி 28-31 வரை கிம் அமெரிக்காவில் இருப்பார் என்று அமைச்சக அறிக்கை குறிப்பிடுகிறது.
அமெரிக்க வரி உயர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும், எனினும் தென் கொரியாவின் ஜனாதிபதி ஆலோசகர் தொடர்புடைய அமைச்சகங்களைச் சந்தித்து நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பார் என்றும் ப்ளூ ஹவுஸ் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டில் $709.4 பில்லியனாக உயர்ந்து – இது 2024 ஆம் ஆண்டை விட 3.8% அதிகமாகும்.
அதே நேரத்தில் அமெரிக்காவிற்கான தென்கொரியாவின் ஏற்றுமதி $122.9 பில்லியனாக இருந்தது.
கடந்த ஆண்டில் அமெரிக்காவிற்கான தென்கொரியாவின் வாகன ஏற்றுமதி $30.2 பில்லியனாக இருந்தது, இது மொத்த அமெரிக்க ஏற்றுமதியில் 25% ஆகும்.
இது தென் கொரியத் துறையில் மிகப்பெரியது – ஆனால் 2024 ஐ விட 13.2% குறைவு.
கடந்த ஆண்டு நட்பு நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில், வொஷிங்டனும் சியோலும் கொரிய வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் அமெரிக்க இறக்குமதிக்கு 25% இலிருந்து 15% வரிகளை நிர்ணயிக்க ஒப்புக்கொண்டன.
இது அவர்களின் ஜப்பானிய போட்டியாளர்களுக்கு இணையாக அமைந்தது.
15% விகிதம் 2025 நவம்பர் 1 அன்று அமலுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.












