பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதிக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த முறைப்பாடு இன்று கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மேலும் மூன்று சந்தேக நபர்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
வழக்கு விசாரணையின் போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனை இன்னும் பெறப்படவில்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
பின்னர், ஜூலை 30 ஆம் திகதி மீண்டும் முறைப்பாட்டை விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அடுத்த நீதிமன்ற விசாரணைக்குள் சட்ட ஆலோசனையின் நிலை குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
நாமல் ராஜபக்ஷவால் இயக்கப்படும் NR Consultancy (Pvt.) Ltd என்ற நிறுவனம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளை மீறி, பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, 2016 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












