அரசாங்க வீட்டுவசதி திட்டத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் இரண்டு தனித்தனி ஊழல் வழக்குகளில், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் இன்று (02) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
ஒவ்வொரு வழக்கிலும் டாக்கா சிறப்பு நீதிபதி நீதிமன்றம் ஹசீனாவுக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக அரசு நடத்தும் BSS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புர்பச்சோலில் உள்ள ராஜுக் புதிய நகரத் திட்டத்தின் கீழ் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்குகளில் 78 வயதான ஹசீனா, அவரது மருமகன் ரத்வான் முஜிப் சித்திக், அவரது மருமகள்கள் துலிப் ரிஸ்வானா சித்திக் மற்றும் அஸ்மினா சித்திக் மற்றும் பிறருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது.
தீர்ப்பு இன்று மதியம் 12.30 மணியளவில் அறிவிக்கப்பட்டது.
அதேநேரம், குற்றவாளிகள் அனைவருக்கும் தலா 1 இலட்சம் பங்களாதேஷ் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் பங்களாதேஷை விட்டு வெளியேறியதிலிருந்து ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார்.
முன்னதாக நீதிமன்றத்தால் அவர் தப்பியோடியவராக அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.













