சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க, அரசு மற்றும் சிறைத் துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் மந்தமாக இருப்பதாகப் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஒரு சிறைச்சாலையானது ட்ரோன்கள் மூலம் பொருட்களை உள்ளே வீசுவதைத் தடுக்க ‘ட்ரோன்-புரூப்’ (drone-proof) ஜன்னல்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
சிறப்புப் பயிற்சி பெற்ற குழுக்கள் ட்ரோன்களைப் பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை விநியோகித்து வருவதாக மான்செஸ்டர் சிறைச்சாலையின் (HMP Manchester) ஆளுநர் ராப் நைட் தெரிவித்துள்ளார்.
முன்னர் ‘ஸ்ட்ரேஞ்ச்வேஸ்’ (Strangeways) என்று அழைக்கப்பட்ட இந்த மிக உயரிய பாதுகாப்புடைய (Category A) சிறைச்சாலையின் வான்வெளி, சட்டவிரோத ட்ரோன் இயக்குபவர்களிடம் ” சிக்கியுள்ளதாக” கூறப்பட்டது.
இதேவேளை கைதிகளுக்குத் தடைசெய்யப்பட்ட பொருட்களை வழங்க அவர்கள் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன் அதன்மூலம் சிறைச்சாலைக்குள் வழங்கப்பட்ட மடிக்கக்கூடிய கத்திகள் மேலும் பல கத்தி வகைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு மான்செஸ்டர் சிறைச்சாலையில் கைதி ஒருவர் ஒரு ட்ரோன் நுனியில் பொதி ஒன்றைக் தொங்கவிட்டபடி, பொருட்களைக் கடத்த முயன்ற காணொளி ஒன்று வெளியாகி கைதியிடம் இருந்து கைபேசி மீட்கப்பட்டது.
தேசிய தணிக்கை அலுவலகத்தின் (NAO) புதிய அறிக்கையின்படி, சிறைத் துறையும் அரசாங்கமும் இந்த “அவசர அச்சுறுத்தல்களுக்கு” பதிலளிக்க மிகவும் தாமதித்துள்ளன.
பாதுகாப்பு உபகரணங்களுக்கான வரவு செலவு திட்டம் முழுமையாகப் பயன்படுத்தப்படாததும், பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள தேக்கமும் சிறைச் சாலைகளைப் பலவீனமாக்கியுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.














