பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையிலும், ஒரு குடியிருப்புப் பகுதியிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக கனேடிய காவல்துறை செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியும் அடங்குவதாக கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1:20 மணியளவில் டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வந்த தகவல்களின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதன்போது அங்கு ஆறு பேர் இறந்து கிடந்தனர், பலர் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர்.
மற்றொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் கடுமையான காயங்களுக்கு உள்ளானவர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சுமார் 25 பேர் உள்ளூர் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கனேடியப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஒரு வீட்டில் மேலதிகமாக இரண்டு பேர் இறந்து கிடந்ததாக பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
இன்றைய (செவ்வாய்) சம்பவத்துடன், வேறு யாராவது காயமடைந்திருக்கலாமா அல்லது வேறுவிதமாக தொடர்புடையவரா என்பதைத் தீர்மானிக்க மேலதிக வீடுகள் மற்றும் பகுதிகளில் அதிகாரிகள் மேலும் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் மாணவர்கள் அல்லது பெரியவர்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மாகாணத்தின் வலைத்தளத்தின் படி, டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பாடசாலையில் 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை 175 மாணவர்கள் கல்வி பயிலுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.













