Dunkerque நகரிலுள்ள தனது தொழிற்சாலையில் மிகப்பெரிய மின்சார எஃகு (l’acier) உலை ஒன்றை அமைப்பதாக அர்சலோர் மிட்டல் (ArcelorMittal) நிறுவனம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் உறுதிப்படுத்தியுள்ளது. தொழிற்சாலையில் உள்ள இரு உயர்உலைகளில் ஒன்றை மாற்றி, நிலக்கரியைப் பயன்படுத்தாமல் எஃகு உற்பத்தி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
வருடத்திற்கு 20 இலட்சம் டன் எஃகு உற்பத்தி திறன் கொண்ட இம்மின்சார உலை 1.3 பில்லியன் யூரோக்கள் முதலீட்டில் அமைக்கப்பட்டு 2029ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆற்றல் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் கீழ் முதலீட்டின் சுமார் பாதி நிதியளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன எஃகு போட்டி மற்றும் உயர்ந்த ஆற்றல் செலவுகள் காரணமாக முன்பே அறிவிக்கப்பட்ட கார்பன் குறைப்பு திட்டம் தாமதமடைந்திருந்தது. இதனால் தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்து அச்சம் எழுந்த நிலையில், இம்முதலீடு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய எஃகு தொழில்துறைக்கு நீண்டகால பாதுகாப்பளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தொழிற்சங்கங்கள் திட்டம் போதுமானதல்ல என்றும் ஊழியர்களின் எதிர்காலம் குறித்து கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளன. 3,200 பணியாளர்களை கொண்ட தொழிற்சாலையில் செயல்பாடு தொடருமா என்பது குறித்து மேலதிக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.














