பிரித்தானியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ், பயணிகளுக்கு தேவையான பயண அனுமதிப் பத்திரங்களை ((Travel Permits) அதிக கட்டணத்தில் வழங்கும் நிறுவனத்தை தனது இணையதளத்தின் மூலம் பரிந்துரைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது இணையதளத்தில் பயண அனுமதிப் பத்திர சேவைகளை வழங்கும் Sherpa என்ற நிறுவனத்தின் சேவையை பயணிகளுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆனால், இந்த நிறுவனம் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிக தொகையை அறவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக அமெரிக்காவுக்குச் செல்ல தேவையான ESTA எனப்படும் 90 நாட்கள் செல்லுபடியாகும் பயண அனுமதிப் பத்திரத்திற்கு அமெரிக்க அதிகாரப்பூர்வ இணையதளம் சுமார் 30 பவுண்டுகள் மட்டுமே வசூலிக்கிறது. ஆனால் அதே அனுமதிப் பத்திரத்தை Sherpa நிறுவனம் 51 பவுண்டுகளுக்கு விற்பனை செய்கிறது. அதேபோல் அவுஸ்திரேலியாவின் eVisitor அனுமதிப் பத்திரம் அரசின் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கும்போதும்,Sherpa அதற்காக 17 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கிறது.
இந்த விவகாரம் குறித்து நுகர்வோர் நல ஆலோசகரான மார்ட்டின் லூயிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ் என்பது தரமான சேவைக்காக அறியப்படும் பிரித்தானியாவின் தேசிய விமான நிறுவனம். ஆனால், இந்த நடைமுறை அதை ஒரு நம்பகமான நிறுவனமாக அல்லாமல், அதிக லாபம் நோக்கும் நிறுவனமாக காட்டுகிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், பயணிகள் அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளங்கள் மூலமாகவே பயண அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என நுகர்வோர் அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.















