வேல்ஸின் பிளைனாவ் க்வென்ட் (Blaenau Gwent) பகுதியில் உள்ள ட்ரெடிகார் (Tredegar) நகரில் நிகழ்ந்த மோதலில் 36 வயது நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மூவர் கொலைக் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 02:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், ட்ரெடிகார் நகரின் மையப்பகுதியில் ஒரு மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த மோதலில் பலத்த காயமடைந்த 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குப் பொலிஸாரின் சிறப்புப் பிரிவினர் தகுந்த ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக 18, 19 மற்றும் 51 வயதுடைய மூன்று நபர்களை க்வென்ட் பொலிஸார் (Gwent Police) கைது செய்துள்ளனர்.
கொலைக் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் மூவரும் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கடந்த சனிக்கிழமை அதிகாலை 01:00 மணி முதல் 02:00 மணி வரை காஸில் ஹோட்டல் (Castle Hotel) மற்றும் ஜெம்ஸ் ஜூவல்லரி (Jem’s jewellery shop) கடைக்கு எதிரே உள்ள காஸில் வீதி (Castle Street) பகுதியில் இருந்தவர்கள், ஏதேனும் தகவல்களை அறிந்திருந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














