வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா கணிசமான அளவில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிலையில் ஈரானில் நடக்கும் போர் ஒரு கவலைக்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
இன்று காலை மக்களவையில் ஆரம்பமான பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் பேசும் போதே பிரதமர் மோடி இந்த விடயத்தைக் கூறினார்.
மேலும் தனது உரையில் அவர், மோதல் காலங்களில் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் குடிமக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன என்றும் கூறினார்.
மேலும், அண்மைய ஆண்டுகளில் இந்தியா தனது எரிசக்தி இறக்குமதி ஆதாரங்களை கணிசமாக பல்வகைப்படுத்தியுள்ளது என்று எடுத்துரைத்த பிரதமர், முன்பு, இந்தியா 27 நாடுகளில் இருந்து எரிசக்தியை இறக்குமதி செய்து வந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்தியா முழுவதும் பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் சீராக இருப்பதை உறுதிசெய்ய தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.














