ஸ்கொட்லாந்தில் உள்ள பிரிட்டனின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள கடற்படைத் தளத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியர் மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்தின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கிளைட் HM கடற்படைத் தளத்திற்குள் இருவர் நுழைய முயன்றதாக ஸ்கொட்லாந்து பொலிஸார் கூறியத்தைத் தொடர்ந்து, 34 வயதான அந்த நபர், 31 வயதான ருமேனியப் பெண் ஒருவருடன் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கைதான ஈரானியர் திங்கட்கிழமை டம்பார்டன் ஷெரிஃப் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை முழுமையாகவும் கவனமாகவும் பரிசீலித்த பின்னர் மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு எதிரான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது, ஆனால் அதே தளத்தில் கைது செய்யப்பட்ட ருமேனியப் பெண்ணுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
எனினும், எதிர்காலத்தில் இவர்களுக்கு எதிராக மேலும் சான்றுகள் கிடைத்தால் இந்த வழக்கைத் தொடர்வதற்கான உரிமையை அரசுத் தரப்பு கொண்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.
ஃபாஸ்லேன் (Faslane) என அழைக்கப்படும் இந்தத் தளம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் நீர்மூழ்கிக் கப்பல் படையின் மையப்பகுதி மற்றும் டிரைடன்ட் அணு தடுப்பு பாதுகாப்பு அமைப்பின் முக்கிய இருப்பிடமாகத் திகழ்கிறது.















